மிர்பூர்: வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது.
முஷ்ஃபிகுர் ரஹீம் 99, லிட்டன் தாஸ் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய முஷ்ஃபிகுர் ரஹீம் 195 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவருக்கு இது 13-வது சதமாக அமைந்தது. அவருக்கு உறுதுணையாக விளையாடிய லிட்டன் தாஸும் சதம் விளாசினார்.
முஷ்ஃபிகுர் ரஹீம் 106 ரன்களும், லிட்டன் தாஸ் 192 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 128 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மெஹிதி ஹசன் மிராஸ் 47, தைஜூல் இஸ்லாம் 4, ஹசன் முராத் 11, காலீத் அகமது 8 ரன்களில் நடையை கட்டினர். முடிவில் 141.1 ஓவர்களில் 476 ரன்களுக்கு வங்கதேச அணி ஆட்டமிழந்தது.
அயர்லாந்து அணி தரப்பில் ஆன்டி மெக்பிரின் 6 விக்கெட்களையும் மேத்யூ ஹம்ப்ரிஸ், கவின் ஹோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த அயர்லாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 38 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. ஆன்டி பில்பிரின் 21, பால் ஸ்டிர்லிங் 27, கேட் கார்மைக்கேல் 17, ஹாரி டெக்டர் 14, கர்திஸ் கேம்பர் 0 ரன்களில் நடையை கட்டினர்.
லார்கன் டக்டர் 11, ஸ்டீபன் டோஹனி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 378 ரன்கள் பின்தங்கியுள்ள அயர்லாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.