விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயவர்த்தனே விடுவிப்பு

வேட்டையன்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட மஹிலா ஜெயவர்த்தனேவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017-ல் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் 2017, 2019 மற்றும் 2020-ல் சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி.

2022-ல் மும்பை இந்தியன் அணியின் செயல்திறன் பிரிவு குளோபல் தலைவராக ஜெயவர்த்தனே பொறுப்பேற்றார். அதன் மூலம் ஐபிஎல் மட்டுமல்லாது மற்ற நாடுகளில் நடைபெறும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக், எம்ஐ எமிரேட்ஸ், எம்ஐ நியூயார்க், எம்ஐ கேப் டவுன் அணிகளில் அவர் கவனம் செலுத்தினார்.

இதன் பின்னர் 2025-ல் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார். 2025 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கும், 2026 சீசனில் ஒன்பதாவது இடமும் பிடித்தது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி உடனான அவரது பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

“மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார் ஜெயவர்த்தனே. அவரது தலைமைத்துவம் மற்றும் விளையாட்டின் மீதான பற்றும் மதிப்பு மிக்கவை. அவரது அர்ப்பணிப்புக்காக மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீட்டா அம்பானி தெரிவித்துள்ளார்.

“மும்பை இந்தியன்ஸ் அணி உடனான கடந்த பத்து ஆண்டு கால பயணம் முக்கியமான ஒன்று. அணியின் வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இணைந்து மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி உள்ளனர். இந்த பயணத்தில் நாம் இணைந்து படைத்த சாதனைகளை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்த பெருமிதத்துடன் விடை பெறுகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எனது நெஞ்சில் என்றென்றும் சிறப்பு இடம் இருக்கும்” என்று ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2027-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. அதற்குள் அணியின் புதிய பயிற்சியாளரை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் அணியின் இரண்டு முன்னாள் கேப்டன்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் முத்திரை படைத்த முன்னாள் வீரர் ஒருவரிடமும் பயிற்சியாளர் பொறுப்பு தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT