லாகூர்: அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து தங்கள் தேசத்தின் அரசு முடிவு செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இதை மோசின் நக்வி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“நாங்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதை அரசுதான் முடிவு செய்யும். எங்கள் பிரதமர் ஷாபாஸ் ஷெபாஸ் ஷெரீப் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியதும், அவரது அறிவுரையை நாங்கள் ஏற்போம். இதில் இறுதி முடிவை அரசே எடுக்கும். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். அதன் பின்னர் அவர்கள் (ஐசிசி) வேறொரு அணியை தொடரில் பங்கேற்க அழைக்கலாம்.
இதெல்லாம் ஒரு தேசத்தின் ஆணையினால் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சாதகமான இடத்தில் நடைபெறுகிறது. அதுபோல ஏன் வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகள் திட்டமிடப்பட கூடாது” என்றார்.
இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும், இந்த தொடரில் தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் தற்போது வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.