கான்சாஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி இறுதி ஆட்டத்தில் நாளை காலை 6.30 மணிக்கு கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி, சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா, நடப்பு சாம்பியனுக்கு தகுந்தபடியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாக் அவுட் சுற்றில் கேப் வெர்டேவை 3-2 என்ற கோல் கணக்கிலும், அதன்பின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்தை 3-2 என்ற கணக்கிலும் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. இருப்பினும் இந்த இரு ஆட்டங்களிலும் எதிரணிக்கு கோல்கள் விட்டுக் கொடுத்திருப்பது அந்த அணியின் டிஃபென்சில் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதை காட்டியுள்ளது.
மறுபுறம், சுவிட்சர்லாந்து அமைதியாகவும், திட்டமிட்ட ஆட்டத்தின் மூலமும் கால் இறுதி சுற்றை எட்டியுள்ளது. அந்த அணி நாக் அவுட் சுற்றில் அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதன் பின்னர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தை 120 நிமிடங்களின் முடிவில் கோல்களின்றி டிரா செய்திருந்தது.
இதன் பின்னர் நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் வென்று கால் இறுதிக்குள் நுழைந்தது சுவிட்சர்லாந்து அணி. அந்த அணி 72 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதி சுற்றில் விளையாட உள்ளது. உறுதியான தற்காப்பும், வேகமான எதிர்தாக்குதல்களும் சுவிட்சர்லாந்து அணியின் பலமாகக் கருதப்படுகின்றன.
அர்ஜெண்டினா அணிக்கு லயோனல் மெஸ்ஸியின் அனுபவம், ஆட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் முக்கிய தருணங்களில் கோல் உருவாக்கும் திறன் மிகப்பெரிய பலமாக உள்ளது. ஜூலியன் ஆல்வரஸ், என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அல்லிஸ்டர் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து தரப்பில் கேப்டன் கிரானிட் ஜாகா, மானுவேல் அகாஞ்சி, டான் என்டோயே, கோல் கீப்பர் கிரெகோர் கோபெல் ஆகியோரின் செயல்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, மத்தியக்களத்தில் ஜாகா ஆதிக்கம் செலுத்தினால், அர்ஜெண்டினாவின் தாக்குதல் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அந்த அணிக்கு உள்ளது.
இதனால் தந்திர ரீதியாக இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜெண்டினா பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாக்குதலை முன்னெடுக்கும். அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து வலுவான டிஃபென்ஸுடன், கவுன்ட்டர் அட்டாக் மூலம் வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கும். இந்த இரு அணிகளும் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் மோதியபோது, கூடுதல் நேரத்தில் ஏஞ்சல் டி மரியா அடித்த கோலின் உதவியுடன் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்விக்கு சுவிட்சர்லாந்து அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.