கேப்ரியல் மார்ட்டினெல்லி
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக பிரேசில் போராடிக்கொண்டிருந்தது. கூடுதல் நேரம் நெருங்கிய நிலையில், 95-வது நிமிடத்தில் கேப்ரியல் மார்ட்டினெல்லி பதிவு செய்த கோல் பிரேசிலை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றது.
அந்த தருணம், பல ஆண்டுகளாக அமைதியாக உழைத்த ஒரு வீரரை உலகக் கோப்பை மேடையின் மையத்தில் நிறுத்தியது. இப்பொது பிரேசிலின் நாயகனாக பேசப்படும் மார்ட்டினெல்லியின் பயணம், பிரகாசமான அகாடமிகளில் தொடங்கியதல்ல. மாறாக, பல மறுப்புகளையும் ஏமாற்றங்களையும் கடந்து உருவானது.
சிறிய நகரத்தில் தொடங்கிய கனவு
2001-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி பிரேசிலின் குவாருல்யோஸில் மார்ட்டினெல்லி பிறந்தார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தை ஜோவோ கார்லோஸ், கால்பந்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலிருந்தே மகனின் திறமையை கவனித்த அவர், விளையாட்டில் முன்னேற தொடர்ந்து ஊக்கமளித்தார்.
குவாருல்யோஸில் பிறந்த மார்ட்டினெல்லி, பின்னர் குடும்பத்துடன் பிரேசிலின் இட்டு நகரில் வளர்ந்தார். அங்குள்ள உள்ளூர் மைதானங்கள், தெருக்கள் மற்றும் சிறிய போட்டிகளே அவரது முதல் பயிற்சி மையங்களாக அமைந்தன.
கொரிந்தியன்ஸில் இருந்து வெளியேறிய தருணம்
பிரேசிலின் பிரபல கால்பந்து கிளப்பான கொரிந்தியன்ஸ் அகாடமியில் இருந்த மார்ட்டினெல்லி, பின்னர் அந்த அணியில் தொடர முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டார். தனது சிறுவயது நண்பர்களையும் பழக்கமான சூழலையும் விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் அவர் எழுதிய கட்டுரையில், அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்து, “கொரிந்தியன்ஸை விட்டு வெளியேறியபோது நான் நிறைய அழுதேன்” என்று குறிப்பிட்டிருந்தார். பல இளம் வீரர்களின் கனவு அங்கேயே முடிந்திருக்கும். ஆனால், மார்ட்டினெல்லிக்கு அது புதிய தொடக்கமாக அமைந்திருந்தது.
திருப்புமுனையான தருணங்கள்
இளம் வயதிலேயே அவரது திறமை ஐரோப்பிய கிளப்புகளின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக 13, 14, 15 மற்றும் 16 வயதுகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நான்கு முறை ட்ரையலில் பங்கேற்றார். இருப்பினும் எந்த முறையும் அவருக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லை.
அதேபோல் பார்சிலோனாவின் புகழ்பெற்ற லா மாசியா அமைப்பிலும் மதிப்பீடு செய்யப்பட்டார். அங்கும் நிரந்தர ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இன்று உலகின் முன்னணி கிளப்புகள் தேடும் வீரராக இருக்கும் மார்ட்டினெல்லியை, ஒருகாலத்தில் ஐரோப்பாவின் இரண்டு பெரிய கிளப்புகள் நிராகரித்தன என்பது அவரது பயணத்தின் முக்கியமான திருப்புமுனைகளாகும்.
2019-ம் ஆண்டு, பிரேசிலின் கீழ்நிலை கால்பந்து அமைப்பில் விளையாடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞரை ஆர்செனல் ஒப்பந்தம் செய்தது. அப்போது ஐரோப்பிய ரசிகர்களில் பலருக்கு மார்ட்டினெல்லி யார் என்றே தெரியாதிருந்தது. இந்த முடிவுக்குப் பின்னால் ஆர்செனலின் தலைமை ஸ்கவுட்டாக இருந்த பிரான்சிஸ் ககிகாவோவின் நம்பிக்கை இருந்தது.
அவர் பின்னர் கூறுகையில், “மான்செஸ்டர் யுனைடெட்டும், பார்சிலோனாவும் அவரை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தன. ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. அதனால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். அந்த முடிவு பின்னர் ஆர்செனலின் மிகச் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக மாறியது” என்றார்.
காயம் கண்ணீருக்கு பின்னான எழுச்சி
2020-ம் ஆண்டு ஏற்பட்ட முழங்கால் காயம் மார்ட்டினெல்லியின் வளர்ச்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியபோது அவர் மனமுடைந்தார். பின்னர் அந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த அவர், அது என்னை உடைத்துவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால், அந்த காயம் அவரது பயணத்தை நிறுத்தவில்லை. மாறாக, அவரது மன உறுதியை தான் மேலும் வலுப்படுத்தியது.
உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்
மார்ட்டினெல்லியின் வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று அவரது கடின உழைப்பாகும். “மார்ட்டினெல்லி கடினமாக உழைக்கும் வீரராகவும், கூடுதலாக பயிற்சிகள் செய்யவும் எப்போதும் தயாராகவே இருப்பார். ஆபத்துகளை எதிர்கொள்ள அவர் அஞ்சுவதில்லை” என்று ஆர்செனல் பயிற்சியாளர் மிகேல் ஆர்டெட்டா பாராட்டியுள்ளார்.
மார்ட்டினெல்லியின் விளையாட்டை கோல்களால் மட்டுமே அளவிட முடியாது. எதிரணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருப்பது, பந்தை இழந்தவுடன் மீண்டும் கைப்பற்ற போராடுவது, அணிக்காக தன்னலமின்றி ஓடுவது போன்ற பண்புகள் அவரை பயிற்சியாளர்களின் விருப்பமான வீரராக மாற்றியிருந்தன. அதனால்தான் கோல்கள் குறைவாக இருந்த சீசன்களிலும் கூட அவர் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
2025/26 சீசன் மார்ட்டினெல்லிக்கு வித்தியாசமானதாக அமைந்தது. பிரீமியர் லீக்கில் 30 போட்டிகளில் விளையாடிய அவர், அதில் 19 முறை மாற்று வீரராகவே களமிறங்கினார். ஒரு கோல் மற்றும் நான்கு அசிஸ்ட்கள் மட்டுமே பதிவானது.
ஆனால், சாம்பியன்ஸ் லீக்கில் வேறு முகத்தை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் 6 கோல்கள் மற்றும் 2 அசிஸ்ட்களை பதிவு செய்தார். தொடர்ந்து ஐந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கோல் அடித்த முதல் ஆர்செனல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மொத்தமாக 49 போட்டிகளில் 7 கோல்கள் மற்றும் 6 அசிஸ்ட்களுடன் சீசனை நிறைவு செய்தார்.
பிரீமியர் லீக்கில் அவரது புள்ளிவிவரங்கள் மிகப்பெரியதாகத் தெரியவில்லை. ஆனால் சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான தருணங்களில் அணிக்காக கோல்கள் அடித்ததன் மூலம் ஆர்செனலின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக தொடர்ந்து ஐந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கோல் அடித்து கிளப்பின் புதிய சாதனையை படைத்தார். அதனால்தான் 2025/26 பிரீமியர் லீக் சாம்பியன் அணியின் ஒரு முக்கிய உறுப்பினராக அவர் பார்க்கப்படுகிறார். மேலும், 2022-23 சீசனில் ஆர்செனலின் சிறந்த வீரராக ரசிகர்களால் தேர்வும் செய்யப்பட்டார்.
உலகக் கோப்பை மேடையில் உருவான புதிய அத்தியாயம்
2022 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற மார்ட்டினெல்லி, பின்னர் கோபா அமெரிக்கா, உலகக் கோப்பை தகுதிச்சுற்று மற்றும் சர்வதேச நட்பு ஆட்டங்கள் என தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றார். தற்போது 20 சர்வதேச போட்டிகளில் பிரேசிலை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.
கிளப் மட்டத்தில் சாம்பியனான பிறகு, உலகக் கோப்பை மேடையிலும் தனது தாக்கத்தை பதிவு செய்துள்ளார். ஜப்பானுக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் 65-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், 90+5-வது நிமிடத்தில் வெற்றிக் கோலை அடித்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய பிரேசில் பயிற்சியாளர் கார்லோ அன்சலோட்டி, “இடைவேளையில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று வீரர்களிடம் கூறினேன். சீக்கிரமாகவோ தாமதமாகவோ கோல் வரும் என்று நம்பினோம். இந்த வெற்றி நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது” என்றார்.
பிரேசிலின் அடுத்த தலைமுறை முகம்?
நெய்மர் தலைமுறைக்குப் பிறகு பிரேசில் தனது அடுத்த தாக்குதல் நட்சத்திரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த பட்டியலில் வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ ஆகியோருடன் இன்று மார்ட்டினெல்லியும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகக் கோப்பையில் 95-வது நிமிடத்தில் அடித்த அந்த கோல், ஒரு போட்டியின் முடிவை மட்டுமே மாற்றவில்லை. கொரிந்தியன்ஸில் இருந்து வெளியேறிய சிறுவன், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனாவால் நிராகரிக்கப்பட்ட இளைஞன், கடுமையான காயத்தால் துவண்ட வீரர் ஆகிய எல்லா அடையாளங்களையும் தாண்டி, பிரேசிலின் புதிய நம்பிக்கையாக மார்ட்டினெல்லி உருவெடுத்திருப்பதை உலகுக்கு நினைவூட்டியது.
25 வயதான மார்ட்டினெல்லியின் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை அவர் கடந்துவந்த பாதையைப் பார்க்கும்போது, அவரது வெற்றியை தீர்மானித்தது திறமை மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. மறுப்புகளை கடந்து வந்த விதம், காயங்களிலிருந்து மீண்டெழுந்த மன உறுதி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திய அணுகுமுறை ஆகியவையே இன்று அவரை பிரேசிலின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாற்றியுள்ளன.
ஜப்பானுக்கு எதிரான அந்த 95-வது நிமிட கோல், பிரேசிலை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஒரு வெற்றிக் கோலாக மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக அமைதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு கால்பந்து வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாகவும் மாறியுள்ளது.