ஹைதராபாத்: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர் ‘கோட் இந்தியா டூர்’ எனும் பெயரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன், உருகுவே கால் பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ், அர்ஜெண்டினாவின் ரோட்ரிகோ டி பாவ் ஆகியோரும் வருகை தர உள்ளனர்.
இந்த குழுவினர் நாளை (13-ம்தேதி) முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இவர்கள் மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இதன் ஒரு கட்டமாக ஹைதராபாத் உப்பல் விளையாட்டு அரங்கில் நாளை (13ம் தேதி) நடைபெறும் கால்பந்து போட்டியில் மெஸ்ஸியும் அவரது குழுவினரும் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியை காண்பதற்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று அவர், போட்டியை காண நேரில் செல்ல உள்ளார்.
இந்நிலையில், இந்த போட்டியை காண நேரில் வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
மெஸ்ஸி குழுவினர் ஹைதராபாத் வருகையையொட்டி, ஹைதராபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பலக்னுமா அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் மெஸ்ஸி கலந்து கொள்கிறார். இதில் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.