சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில் இந்தத் தொடர் நடைபெறுது இது 3-வது முறையாகும். இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் பேசும்போது, “டபிள்யூடிஏ 250 புள்ளிகள் கொண்ட தொடர் இந்தியாவில் 3-வது முறையாக நடத்தப்பட உள்ளது. இதில் உலகத் தரவரிசையில் 50 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு, போட்டிகள் நடைபெறும் மூன்று ஆடுகளங்களிலும் முதன் முறையாக மின்னணு ‘லைன் காலிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளோம். சென்னையைச் சேர்ந்த விளையாட்டு மற்றும் டென்னிஸ் ஆர்வலர்கள் இந்தப் போட்டிகளைக் காண பெருமளவில் வருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.