விளையாட்டு

வேகத்தில் இருந்து சுழலுக்கு மாறி கலக்கும் இடது கை ஸ்பின்னர் தன்மய் பலோடா!

ஆர்.முத்துக்குமார்

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்தியா யு-19 அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் தன்மய் பலோடா அபாரமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் சரிந்து, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை மீட்க நீல் படேல் மற்றும் எலி பிரெயின் முயன்றனர். அப்போது பந்துவீச்சில் அறிமுகமான தன்மய் பலோடா, முதல் பந்திலிருந்தே கட்டுக்கோப்பான ஸ்பின் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசும் அதே வேளையில் பந்தை பேட்டரிலிருந்து விலகிச்செல்லுமாறு திருப்புவது என்று ஓர் அச்சுறுத்தலான இடது கை சுழற்பந்து வீச்சாளராக உள்ளார் பலோடா.

இதுகுறித்து பலோடா ‘தி இந்து’ ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஊடகத்திடம் கூறுகையில், “ஸ்டம்புகளை குறிவைத்தே தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்பதுதான் திட்டம்” என்றார்.

அது அவருக்கு விரைவிலேயே பலன் கொடுத்தது. ஆஸி. வீரர் எலி பிரெயினை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த பலோடா, 58 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நிலைத்து நின்ற நீல் படேலை கிரீஸை விட்டு இறங்கி விளையாட வைத்து ஏமாற்ற, ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார்.

அடுத்த ஓவரிலேயே செட் ஹோலிக்கை வீழ்த்திய அவர், தனது முதல் நான்கு ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து கடுமையாகத் தடுமாறியது.

தனது பந்துவீச்சுத் திட்டம் குறித்து பலோடா மேலும் கூறும்போது, “ஸ்டம்புகளை குறிவைத்து, மிகவும் இறுக்கமான லைனில் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது திட்டம். எங்களது பயிற்சியாளர் யெரே கவுடும் ரொம்பவும் வேரியேஷன் வேண்டாம் என்றும், பொறுமையாக பந்துவீச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்” என்றார்.

நீண்ட முதல் ஸ்பெல்லில் பலோடாவின் பொறுமை கடுமையாக சோதிக்கப்பட்டது. மதிய உணவுக்கு முன்னும் பின்னும் சேர்த்து 18 ஓவர்கள் அவர் பந்து வீசினார். பின்னர் இரண்டாவது ஸ்பெல்லில் மீண்டும் தாக்குதல் நடத்தி ஜேக்கப் பீட்ஸ் மற்றும் தாமஸ் வாசியோ ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் யூத் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட் சாதனையை எட்டினார். தொடர்ந்து பேட்ரிக் சல்லிவனை கேட்ச் மூலம் வெளியேற்றிய பலோடா, 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

“இந்திய யு-19 அணிக்காக நான் விளையாடிய முதல் போட்டியும் இதுதான். எனது அறிமுகப் போட்டியிலேயே இப்படி வீசியது பெருமையாக இருக்கிறது” என்று பலோடா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரோஹ்தக் நகரைச் சேர்ந்த தன்மய் பலோடா, ஆரம்பத்தில் இந்திய யு-19 அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. வயது தொடர்பான பிரச்சினை காரணமாக ரோஹித் யாதவ் அணியில் இருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பலோடா அணியில் சேர்க்கப்பட்டார்.

அந்த நேரத்தில் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் முகாமில் இருந்த பலோடாவுக்கு திடீரென இந்திய அணியில் இடம் கிடைத்தது.

“பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் முகாமில் இருந்தபோது எனக்கு அழைப்பு வந்தது. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் ரோஹித்துக்குப் பதிலாக என்னைத் தேர்வு செய்திருப்பதாகத் தெரிவித்தனர். அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. உடனே என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்” என்று அவர் கூறினார்.

வேகப் பந்துவீச்சில் இருந்து சுழற் பந்துவீச்சுக்கு...

தன்மய் பலோடா. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் வேகப் பந்துவீச்சாளராகவே இருந்தார்.

ஹரியானா மாநிலத்தின் யு-16 மாவட்ட அணியில் விளையாடியபோது, ஒரு போட்டித் தொடரில் சில ஆட்டங்களில் சுழற் பந்துவீச்சை முயற்சி செய்தார். அதில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, முழுநேர சுழற் பந்துவீச்சாளராக மாற முடிவு செய்தார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு பலோடாவுக்கு முக்கியமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிரிக்கெட்டைத் தொடர்வதா அல்லது படிப்பில் கவனம் செலுத்துவதா என்று அவரது பெற்றோர் அவரிடம் கேட்டனர்.

கிரிக்கெட்டையே தனது எதிர்காலமாகத் தேர்வு செய்த பலோடா, அதற்கான முழு ஆதரவையும் தனது பெற்றோரிடமிருந்து பெற்றார்.

“எனது பெற்றோர் ஆரம்பம் முதலே எனக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர். எந்த விஷயத்திற்கும் அவர்கள் எனக்கு தடையாக இருந்ததில்லை” என்றார்.

அடுத்த இலக்கு ரஞ்சி கோப்பை:

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான இந்தப் போட்டி முடிந்ததும் பலோடா ஹரியானா அணியுடன் இணைய உள்ளார். லஹ்லியில் நடைபெறவுள்ள ஹரியாணாவின் இந்த சீசனுக்கான முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் ஹிமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக அவர் களமிறங்க உள்ளார். இந்தப் போட்டி அக்டோபர் 11-ம் தேதி தொடங்குகிறது.

வேகப் பந்துவீச்சாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் சுழற் பந்துவீச்சாளராக மாறி, தற்போது இந்திய யு-19 அணிக்காக அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் தன்மய் பலோடாவின் பயணம், வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து அதை சரியாகப் பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT