இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் விலகல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் விலகல்
Updated on: 
1 min read

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகி உள்ளார். சுமார் 10 ஆண்டுகள் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக அவர் செயல்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009-ல் அவர் அறிமுகமானார். 2016 முதல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தி வந்தார். மித்தாலி ராஜ் ஓய்வுக்கு பிறகு, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் மூன்று மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் செயல்பட்டார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது. சுமார் 211 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ளார். அண்மையில் முடிந்த ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணி அவரது தலைமையில் செயல்பட்டது.

37 வயதான அவர், இந்திய அணிக்காக 8 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 205 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 9,191 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக அணியில் கேப்டன் மாற்றம் குறித்த பேச்சு எழுந்த நிலையில், பிசிசிஐ ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அவர் அறிவித்துள்ளார்.

“இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து பார்மெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நான் விலகுகிறேன். இது அவ்வளவு எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏனெனில், இந்த பயணத்தின் நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் தருணங்கள் என அனைத்தும் என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும்.

இதயம் முழுவதும் எண்ணற்ற உணர்ச்சியுடன் அமைதியோடு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நமது அணி சிறந்த இடத்தில் உள்ளது என்று நம்புகிறேன். எனது கேப்டன் பொறுப்பு தான் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட் மீது நான் கொண்டுள்ள பிரியத்தின் பயணம் தொடரும்” என்று சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கேப்டன் யார்?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் அவரது தலைமையிலான அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அடுத்த கேப்டன் வாய்ப்பை பிசிசிஐ அவருக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் விலகல்
‘ஃபிளை துபாய்’ விமானத்தை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in