கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட உறுப்பினர் குழுவில் அணியின் முன்னாள் வீரர்கள் குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் ஷம்மி சில்வா. இந்நிலையில் வீரர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே சில்வாவை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு பரிசீலித்து வந்தது.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் பதவியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை வாரியத்தின் பணிகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழுவை இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதில் இரான் விக்ரமரத்னே, குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா, சிதாத் வெட்டிமுனி, பிரகாஷ் ஷிகாப்டர், அவந்தி கொலம்பாகே, துஷிராரா டெல்லா, உபுல் குமாரபெருமா, தினால் பிலிப்ஸ் ஆகிய 9 பேர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.