ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களைக் குவித்து, இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்த தமிழகத்தின் நட்சத்திர வீராங்கனையான வித்யா ராம்ராஜ், தனது அசுர வளர்ச்சியின் பின்னால் இருக்கும் கண்ணீர்க் கதையைப் பகிர்ந்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் வித்யா ராம்ராஜ் நிகழ்த்திய சாதனை சாதாரணமானதல்ல. மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியின் இறுதிச்சுற்றின் இறுதிப் பகுதியில் அபாரமாக ஓடி தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினார் வித்யா. முன்னதாக கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலம் வென்றதுடன், ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையைத் தகர்த்தெறிந்தார்.
இந்த இமாலயச் சாதனைகளின் பின்னணியில் லாரி ஓட்டுநரான தனது தந்தை ராம்ராஜின் தியாகம் நிறைந்த உழைப்பு இருப்பதை வித்யா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக வித்யா கூறும்போது, “எனது தந்தை சாப்பிடாமல் சேமித்த பணத்தில்தான் என் ஸ்பைக் ஷூக்கள் வாங்கப்பட்டன.
எங்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் மிகவும் கடினமாக இருந்தது. லாரி ஓட்டுநரான என் தந்தைக்கு பெரிய அளவில் வருமானம் கிடையாது.
அப்போதெல்லாம் ஓடுவதற்கான ‘ஸ்பைக்’ ஷூக்கள் வாங்குவதே எங்கள் குடும்பத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. 2009-ம் ஆண்டுகளில் ஒருவேளை உணவின் விலை ரூ.10 முதல் ரூ.40-ஆக இருந்தது. எனக்கு ஷூ வாங்கித் தருவதற்காக எனது அப்பா அவரது சாப்பாட்டை தவிர்ப்பார்.
மதிய உணவுக்குப் பதிலாக வெறும் டீ அல்லது பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு, அந்த பணத்தை சேமித்து வைத்து எனக்கு ஸ்பைக் ஷூ வாங்கித் தருவார். நானும் எனது சகோதரியும் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகத் தன் பசியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல” என்று கண் கலங்கினார்.
சிறு வயதில் தந்தையின் இந்தத் தியாகங்களின் ஆழம் புரியாமல் இருந்த தங்களுக்கு, தற்போது சர்வதேச அரங்கில் சாதித்த பிறகுதான் அதன் மதிப்பு முழுமையாகப் புரிந்திருப்பதாக வித்யா குறிப்பிட்டார். “அன்று அவர் பட்டினி கிடந்து எங்களை உருவாக்கியதுதான் இன்று எங்கள் குடும்பத்துக்கு புதிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது. என் தந்தை செய்ததியாகத்துக்கு இன்று நாங்கள் அவருக்குக் கைமாறாக எங்களது வெற்றியைச் சமர்ப்பிக்கிறோம்” என்றார்.
2026 ஆசிய விளையாட்டில் வித்யா ராம்ராஜ் பெற்ற மூன்று பதக்கங்களும் மூன்று வெவ்வேறு கதைகளைச் சொல்கின்றன. வெள்ளி – அணிக்காக ஓடிய வேகம், வெண்கலம் – தனிப்பட்ட போராட்டத்தின் வெற்றி; அதனுடன் தேசிய சாதனை, தங்கம் – இந்திய அணியுடன் இணைந்து பெற்ற உச்ச வெற்றி. வித்யா ஓடியது 400 மீட்டர். ஆனால் அவர் கடந்து வந்த தூரம்... அதைவிட மிக நீளமானது, அவருக்கு 28 வயது ஆகிறது.
இந்த வயதில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்வது என்பது அனைவராலும் இயலாது. எனினும் சக அணியில் உள்ள 32 வயதான பூவம்மா இந்த விஷயத்தில் வித்யாவுக்கு பெரிய உந்துதலாக இருந்துள்ளார். இது தடகளத்தில் சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை நிருபணமாக்கி உள்ளது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எளிய குடும்பப் பின்னணியைக் கடந்து, கடின உழைப்பால் உலக மேடையில் இந்தியக் கொடியை உயர்த்திப் பறக்கவிட்டுள்ள வித்யா ராம்ராஜ், இந்திய இளைஞர்களுக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கும் மிகப்பெரிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
‘பதக்கத்தை விட நேரமே முக்கியம்’ - ஆசிய விளையாட்டு போட்டியில் வித்யாவின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று இருந்தது. “பதக்கம் வேண்டும்” என்பதைவிட “நேரத்தை மேம்படுத்த வேண்டும்” என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஏனெனில் கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வித்யா இலக்கை 55.42 விநாடிகளில் எட்டி பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்திருந்தார். தற்போது 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நேரத்தில் 0.67 விநாடிகளை குறைத்தார். 400 மீட்டர் போன்ற போட்டியில் 0.67 விநாடி என்பது மிகப் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்து வந்த பாதை: பள்ளிக் காலத்தில் வித்யாவும் அவரது சகோதரி நித்யாவும் முதலில் ஹாக்கி விளையாட்டிலேயே ஆர்வம் காட்டினர். 7-ம் வகுப்பு படிக்கும்போது ஈரோட்டில் உள்ள விளையாட்டு விடுதியில் சேர்ந்த பிறகே தடகளப் பயிற்சிக்கு மாறினர். வித்யா ஆரம்பத்தில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்தார். 2017-க்குப் பிறகு 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டம் பிரிவுக்கு மாறினார். ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஏ. சங்கரின் வழிகாட்டுதலிலும், பின்னர் சென்னையில் பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ரத்தோர் தலைமையிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார் வித்யா.
லாரி ஓட்டுநரின் மகளாக பிறந்ததால், முறையான விளையாட்டு உடைகள், சத்தான உணவு மற்றும் பயிற்சிக் கட்டணங்களைச் சமாளிப்பது தொடக்கத்தில் வித்யாவுக்கு பெரும் சவாலாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க தொடர் பயிற்சிகள், காயங்கள் மற்றும் பந்தயத்துக்கு முந்தைய பதற்றங்களைச் சமாளித்து மீண்டு வர பல ஆண்டுகள் போராடினார். இதன் பலனாக கடந்த 2023-ல் ஆசிய விளையாட்டில் வித்யா 3 பதக்கங்களை வென்றிருந்தார். அப்போது அவர், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் கைப்பற்றினார். தற்போது தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள பரிசுத் தொகை:
தங்கம்: ரூ.75 லட்சம்
வெள்ளி: ரூ.50 லட்சம்
வெண்கலம்: ரூ.30 லட்சம்