கோலி தலைமையிலான இந்திய அணி

 
விளையாட்டு

செஞ்சூரியனில் வென்ற முதல் ஆசிய அணி கோலி தலைமையிலான இந்தியா: மறக்க முடியுமா?

ஆர்.முத்துக்குமார்

2021-ம் ஆண்டு இதே தினத்தில் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை இந்திய அணி நிகழ்த்தியது. மேலும் இந்திய அணிக்கே இது புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்க மண்ணில் பெற்ற வெற்றியாக அமைந்தது.

முதல் இன்னிங்சில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் 123 ரன்களை எடுத்தார். இதில் 17 பவுண்டரி 1 சிக்ஸ் அடங்கும். இதுதான் தென் ஆப்பிரிக்காவில் ஒரு இந்திய தொடக்க வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மயங்க் அகர்வால் 60 ரன்களையும் கேப்டன் விராட் கோலி 35 ரன்கள், ரஹானே 48 ரன்கள் என்று பங்களிப்பு செய்ய லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது.

ஆனால் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ராவை ஆட முடியாமல் திக்கித் திணறிய தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 197 ரன்களுக்குச் சுருண்டது, ஷமி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்க்க பும்ரா, சர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

2வது இன்னிங்சில் இந்திய அணி ரபாடா (4/42), மார்க்கோ யான்சென் (4/55) ஆகியோரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 305 ரன்கள். 4-ம் நாள் ஆட்டத்திலேயே பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரின் பொறிபறக்கும ஆக்ரோஷ பந்து வீச்சுக்கு தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் (1), கீகன் பீட்டர்சன் (17), ரசி வான் டெர் டசன் (11), கேசவ் மகராஜ் (8) என்று பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட 94/4 என்று சரிவு கண்டிருந்தனர்.

5-ம் நாளான இன்றைய தினமான அன்று தென் ஆப்பிரிக்காவின் வெற்றியைத் தீர்மானிக்க டீன் எல்கர் கிரீசில் இருந்தார். ஒருவிதத்தில் இந்திய அணியின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தூணாக நின்று கொண்டிருந்தார் கேப்டன் டீன் எல்கர். அவர் 52 ரன்களுடன் இறங்கி 77 ரன்கள் வரை வந்தார், அப்போது ஷமியின் பந்து ஒன்று உள்ளே ஸ்விங் ஆக பிளிக் ஆடும் முயற்சியில் எல்கர் எல்.பி.ஆனார்.

அங்கிருந்து 130/4லிருந்து அடுத்த 61 ரன்களில் 6 விக்கெட்டுகளைத் தென் ஆப்பிரிக்கா இழந்தது, குவிண்டன் டி காக் என்னும் அபாய வீரர் சிராஜ் பந்தை கட் ஆடும் முயற்சியில் பவுல்டு ஆனார். வியான் முல்டர் 1 ரன்னில் ஷமியின் காற்றில் உள்ளே வந்து பிறகு லேசாக வெளியே எடுத்த பந்தில் எட்ஜ் ஆகி 1 ரன்னில் வெளியேறினார், மார்க்கோ யான்செனும் ஷமி பந்தில் எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் நடையைக் கட்டினார்.

கேகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி இருவரையும் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்த தென் ஆப்பிரிக்கா 191 ரன்களுக்கு மடிந்து பெரும் தோல்வி கண்டது. இந்தியா தரப்பில் பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா கதையை முடித்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என்று முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்த 2 டெஸ்ட்களில் தோற்று தொடரை இழந்தது, ஆனால் இந்த டெஸ்ட் வெற்றி ஒரு ஆசிய அணி முதல் முறையாக் செஞ்சூரியனில் வெற்றி பெற்றதாக புகழ்பெற்றது.

SCROLL FOR NEXT