கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்துடன் லீக் சுற்று நிறைவடைகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றின் கடைசி இடத்திற்கான பந்தயத்தில் கணித ரீதியாக இன்னும் வாய்ப்பில் நீடிக்கின்றன.
இருப்பினும் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அது ஒரு முக்கியத்துவமற்ற போட்டியாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இன்று பிற்பகல் மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் 14 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடும்.
இது நிகழ்ந்தால் கொல்கத்தா - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவு யாருக்குமே பலன் இல்லாமல் போகும். ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் மட்டுமே கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலும் கொல்கத்தா அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றாக வேண்டும். கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 15 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும்.
இது நிகழ்ந்தாலும் பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி கண்டால் அந்த அணியும் 15 புள்ளிகளை பெறும். இந்த சூழ்நிலை உருவானால் நிகர ரன் விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது ஒருபுறம் இருக்க பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே டெல்லி அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். இது நிகழ்ந்தால் டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இதன் வாயிலாக டெல்லி அணி 14 புள்ளிகளை பெறும்.
அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் இருக்கும். தற்போது அந்த அணியின் நிகர ரன் விகிதம் 0.083 ஆக இருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிகர ரன் விகிதம் -0.871 ஆக உள்ளது. இதனால் டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெறுவது என்பது கடினம் என்றே பார்க்கப்படுகிறது.
தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பலவிதமான புள்ளிவிவரக் கணக்குகளை யோசித்துக் கொண்டிருப்பதை விட, இரு அணிகளும் தகுதி பெறும் வாய்ப்புகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், தொடரை வலுவான வெற்றியோடு நிறைவு செய்வதில் அதிக கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.
கொல்கத்தா அணி இந்த சீசனின் தொடக்கத்திலேயே முன்னணி பந்து வீச்சாளர்களின் காயங்கள் மற்றும் சில முக்கிய வீரர்கள் விளையாட முடியாத சூழ்நிலை காரணமாகப் பெருமளவில் பாதிக்கப்பட்டது. முஸ்டாபிஸுர் ரஹ்மான், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், மதீஷா பதிரணா ஆகிய அனைவரும் பல்வேறு காரணங்களால் விளையாட முடியாமல் போனது. அதே நேரத்தில், பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, காயத்தில் இருந்து மீண்டு வந்த நட்சத்திர வீரர் கேமரூன் கிரீனாலும் தொடக்கக் கட்டப் போட்டிகளில் பந்துவீச முடியவில்லை.
இருப்பினும் கொல்கத்தா அணி தங்களின் கடைசி ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது. தற்போது முக்கியமான கட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேனான அங்ரிஷ் ரகுவன்ஷி காயம் காரணமாக விலகி உள்ளார். நடப்பு தொடரில் அவர், 5 அரை சதங்களுடன் 422 ரன்கள் குவித்திருந்தார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைப் பொறுத்தவரை அவர்களின் பேட்டிங் பெருமளவில் கே.எல். ராகுலையே சார்ந்துள்ளது. அவர், இந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்கள் உட்பட 171-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் 533 ரன்கள் குவித்துள்ளார். கே.எல்.ராகுல் ஒரு வலுவான தொடக்கத்தைத் தராத பெரும்பாலான போட்டிகளில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தடுமாறி உள்ளது.
டெல்லி அணியின் பந்துவீச்சிலும் நிலையானத் தன்மை இல்லாமல் உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த திணறி வரும் வேளையில், கேப்டன் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். அக்சர் படேல் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார், அதே நேரத்தில் குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
தங்களது சீசன் சீரானதாக இல்லாதபோதிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராகப் பெற்ற அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளின் நம்பிக்கையோடு இப்போட்டியில் களம் இறங்குகிறது. இரு அணிகளுக்கும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால், வெற்றிக்காக தங்களின் முழு பலத்தையும் பிரயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.