விளையாட்டு

ரகுவன்ஷி ரன் அவுட் விவகாரம்: 3-வது நடுவரின் தீர்ப்பு சரியா?

ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் தொடங்கி 19 ஆண்டுகள் ஆகிறது, இதில் பீல்டரைத் தடுத்தது, அல்லது களத்தில் பீல்ட் செய்யப்படு த்ரோ செய்யப்பட்ட பந்தின் இலக்கைத் தடுக்குமாறு ஓடி ‘Obstructing The Field’ முறையில் அவுட் ஆன 4-வது வீரர் என்ற எதிர்மறைச் சாதனைக்குரியவரானார் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அங்கிரிஷ் ரகுவன்ஷி.

5-வது ஓவரின் கடைசி பந்து அது. பந்தை மிட் ஆனில் தட்டி விட்ட ரகுவன்ஷி ஒரு ரன்னுக்காக ஓடத்தொடங்கினார். ஆனால் எதிர்திசையில் இருந்த பேட்ஸ்மேன், அவரைத் திருப்பி அனுப்பினார். காரணம் ஷமி அங்கு பந்தை பீல்டிங் செய்ததுதான். அவர் பந்தையும் விக்கெட் கீப்பர் முனையை நோக்கி த்ரோ செய்தார். இதனால் மீண்டும் பேட்டிங் கிரீசைத் தொடும் முயற்சியில் பந்து வந்த திசையைப் பார்த்து தன் ஓட்டத்தின் திசையை ரகுவன்ஷி மாற்றி த்ரோ செய்யப்பட்ட பந்தின் இலக்கை மறித்தார்.

நேரலையில் பார்க்கும் போது ரகுவன்ஷி எந்தத் தவறும் செய்யவில்லை கிரீசை எட்டத்தான் அவர் ஓடினார், ஒரே திசையில் தான் ஓடினார். நேர்கோட்டில் ஓடினார் என்பது போல் தெரிந்தது, ஆனால் தீர்ப்பு 3-வது நடுவரிடம் சென்ற போது நடுவர் ரோஹன் பண்டிட் மிகச்சரியான முடிவை எடுத்ததாகவே உறுதியானது.

ரீப்ளேயில் ரகுவன்ஷி தன் வழக்கமான ஓடுபாதையை விட்டு விலகி பந்து வரும் திசையை நோக்கி அதைத் தடுக்கும் எண்ணத்துடன் ஓடியது தெரியவந்தது. அதாவது நார்மலாக ஒருவர் பாதை மாறலாம், ஆனால் இது வேண்டுமென்றே பந்தை மறிக்கும் நோக்கத்துடன் ஓடியது போல் ரீப்ளேயில் தெரிய, நடுவர் அவுட் கொடுத்தார். ரகுவன்ஷிக்கு கடும் அதிருப்தி.

விதிமுறை சொல்வதென்ன? - அதாவது ஒரு பேட்டர் விக்கெட்டுகளுக்கிடையே ரன்களுக்காக ஓடும்போது வீரர் குறிப்பிடத்தகுந்த காரணம் ஏதுமின்றி தன் ஓட்டத் திசையை மாற்றி அதன் மூலம் பீல்டர் ரன் அவுட்டுக்காகத் த்ரோ செய்யும் பந்தைத் தடுக்குமாறு, மறிக்குமாறு இடைநிறுத்துமாறு ஓடினால் பீல்டிங் அணி அப்பீல் செய்தால் நடுவர் ‘பீல்டைத் தடுத்தது’ என்ற வகையில் அவுட் தர முடியும். அது ரன் அவுட்டாக முடிந்திருக்குமா அல்லது வேறு ஏதாவது ஆகியிருக்குமா என்பது பற்றியெல்லாம் இந்த விதிமுறையில் இடமில்லை. பேட்டர் காரணமின்றி தன் ஓடுபாதையை மாற்றி த்ரோ வரும் திசைக்கு தன் ஓட்டத்தைத் திருப்பி அதனால் ரன் அவுட் வாய்ப்பு தடுக்கப்படுமேயானால் அது அவுட் அவ்வளவுதான். ஆகவே ரகுவன்ஷி அவுட்.

இதைப் பிரமாதமாக ரீப்ளேயில் பல கோணங்களில் ஆய்வு செய்து நடுவர் ரோஹன் பண்டிட் அற்புதமான தீர்ப்பை வழங்கினார் என்றே கூற வேண்டும்.

சஞ்சய் பாங்கரும் பேட்டர் திடுமென 180 டிகிரி தன் ஓடுபாதையை மாற்ற முடியுமா? மாற்றக்கூடுமா? ஆகவே அவுட் தான் என்றார்.

அதாவது ரன்னர் முனையை நோக்கி ஓடும்போது நடு பிட்சில் இருந்த ரகுவன்ஷி ரன் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட போது பிட்சின் வலது முனைக்கு தன் ஓட்டத்தின் திசையை மாற்றினார். கடைசியில் பந்தை மறிக்கும் நிலைக்கே அவர் ஓடினார். டைவ் அடித்து ரீச் ஆகும் போதும் தன் திசையை மாற்றினார். இந்த நடைமுறையில் த்ரோ செய்யப்பட்ட பந்தின் திசையை சரியாக இடைமறித்தார். அதற்கு அவுட் கொடுக்காமல் இருக்க முடியாது என்றார்.

SCROLL FOR NEXT