விளையாட்டு

“ஷுப்மன் கில்லுக்கு ஒரு நீதி... சுந்தருக்கு ஒரு நீதியா?” - முகமது கைஃப் விளாசல்

ஆர்.முத்துக்குமார்

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது இறங்க வேண்டிய தேவை இருந்தும் அவர் இறங்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனும்போதும் காயத்தினால் ஷுப்மன் கில் இறங்க மறுத்தார், ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தரை இறக்கி அவரது டி20 உலகக்கோப்பை வாய்ப்பையே இப்போது கேள்விக்குட்படுத்தியுள்ளனர் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் காட்டமாக சாடியுள்ளார்.

வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா போராடி வென்றது. முன்னதாக, பந்துவீச்சின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்பு பகுதியில் தசைப்பிடிப்பு (Side Strain) ஏற்பட்டது. இதனால் அவர் தனது முழு ஓவர்களையும் வீசாமல், 5 ஓவர்களுடன் (27 ரன்கள்) வெளியேறினார். ஆனால், இந்திய இன்னிங்ஸின் இக்கட்டான சூழலில் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார். கே.எல். ராகுல் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றாலும், சுந்தரால் மறுமுனையில் வேகமாக ஓட முடியவில்லை.

இந்நிலையில் யூடியூப் சேனலில் முன்னாள் வீரர் முகமது கைஃப் காட்டமாக விமர்சித்துள்ளார்:

“முன்பு ஷுப்மன் கில் காயம் அடைந்திருந்த போது, கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. ரன்கள் தேவைப்பட்டாலும் வீரரின் நலன் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சுந்தர் விஷயத்தில் அந்த அணுகுமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?

சுந்தரால் ஒரு ரன்னைக் கூட ஓடி எடுக்க முடியாத நிலை இருந்தது. பந்து டீப் பாயிண்ட் திசையில் சென்றாலும் அவரால் இரண்டு ரன்கள் ஓட முடியவில்லை. இது கே.எல். ராகுலின் ஆட்டத்தையும் பாதித்தது. ஒரு வாரத்தில் குணமாக வேண்டிய காயம், இது போன்ற ரிஸ்க்கான முடிவுகளால் 20 முதல் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் இது தேவையற்றது.

மேலும், வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார், அந்த வேளையில் பந்துக்கு ஒரு ரன் வீதம் தேவைப்படுகிறது எனும்போது வேறு யாரையாவது இறக்க வேண்டும். காயமடைந்த வீரரை பிரஷரில் இறக்கும் போது அவர் காயம் இன்னும் மோசமடையும். ” என்று கைஃப் இந்திய அணி நிர்வாகத்தை விளாசியுள்ளார்.

SCROLL FOR NEXT