படம்: எஸ்.சத்தியசீலன்

 
விளையாட்டு

கோலாகலமாக தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியா, பெல்ஜியம் அணிகள் அபார வெற்றி

பெ.மாரிமுத்து

சென்னை: 14-வது ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் சென்னை மற்றும் மதுரையில் வெள்ளிக்கிழக்கை (நவ.28) தொடங்கியது. மதுரையில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான ஜெர்மனி, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது.

இதில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஜஸ்டஸ் வார்வெக் 19 மற்றும் 56-வது நிமிடங்களில் பீல்டு கோல் அடித்து அசத்தினார். பென் ஹாஸ்பாக் 43-வது நிமிடத்திலும், பால் க்லாண்டர் 44-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றினர்.

‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது. அயர்லாந்து அணி சார்பில் ரோவ் லூயிஸ் 12 மற்றும் 32-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். வில்லியம்ஸ் கிரிகோரி 34-வது நிமிடத்திலும், தாம்சன் மிலோ 40-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

சென்னையில் பிற்பகல் 1.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள இரு முறை சாம்பியனான அர்ஜெண்டினா - ஜப்பான் அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணி தரப்பில் ரோட்ரிகஸ் நிக்கோலஸ் 2 கோல்களும், டோரிஜியானி மேடியோ, காரியா புருனோ ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஸ்பெயின் அபாரம்: மதுரையில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதின. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணி சார்பில் அவிலா புருனோ ஹாட்ரிக் கோல் அடித்தார். மார்ட்டின் ஜோசப் 2 கோல்கள் அடித்து அசத்தினார். செர்ராஹிமா ஆல்பர்ட், மெதினா ஆன்ட்ரெஸ், மோரான் டன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

சென்னையில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - சீனா அணிகள் மோதின. இதில் நியூஸிலாந்து 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணி சார்பில் எல்ம்ஸ் ஜான்டி 3 கோல்கள் அடித்தார். லின்ட்ஸ் சேம், பிரவுன் ஓவன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

பெல்ஜியம் கோல் மழை: மதுரையில் மாலை 3.45 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள பெல்ஜியம் - நமீபியா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 12-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் லாவர்ஸ் மதிஸ் 4 கோல்கள் அடித்து அசத்தினார். லாபூஷேர் ஹ்யூகோ 3 கோல்களையும் பால்தசார் லூகாஸ் 2 கோல்களையும் தியரி பெஞ்சமின், பிரான்கோயிஸ் மத்தியாஸ், ரோஜி நேதன் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

‘ஏ’ பிரிவில் இரவு 8.45 மணிக்கு சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 18-வது இடத்தில் உள்ள சிலி அணியுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குஜூர் ரோஷன் 2 கோல்களும் (16 மற்றும் 21-வது நிமிடங்கள்), தில்ராஜ் சிங் 2 கோல்களும் (25-வது, 34-வது நிமிடங்கள்), அஜீத் சிங் (35-வது நிமிடம்), ஏக்கா அன்மோல் (48-வது நிமிடம்), ரோஹித் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

SCROLL FOR NEXT