பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் ஆஷஸ் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். முதல் 2 போட்டிகளிலும் விளையாடாத அவர், 3-வது டெஸ்டில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதால் 3-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறும்போது,"ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
அவரது கவனம் அடுத்த ஆண்டு நடைபெற டி 20 உலகக் கோப்பை தொடராக இருக்கும். பாட் கம்மின்ஸ் சிறந்த முறையில் தயாராகி உள்ளார். அவர், போட்டியில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியுடன் உள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அவர், டாஸில் பங்கேற்பார் என நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.