ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்ஸில் ஜம்மு & காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷுபம் பண்டிர் 121, சஹில் லாட்ரா 72, கேப்டன் பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாதவன் 70, அப்துல் சமத் 61 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த கர்நாடகா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 130, கிருத்திக் கிருஷ்ணா 27 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய கர்நாடக அணி 93.3 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மயங்க் அகர்வால் 160, கிருத்திக் கிருஷ்ணா 36, வித்யாதர் பாட்டீல் 11, ஷிகர் ஷெட்டி 0, பிரசித் கிருஷ்ணா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜம்மு & காஷ்மீர் அணி சார்பில் அகிப் நபி 5 விக்கெட்களை வீழ்த்தினார். சுனில் குமார், யுத்விர் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 291 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 57 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
கம்ரான் இக்பால் 160 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய சஹில் லாட்ரா 16 ரன்கள் எடுத்திருந்தார். முன்னதாக யாவர் ஹாசன் 1, ஷுபம் பண்டிர் 4, கேப்டன் பராஸ் டோக்ரா 16, அப்துல் சமத் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஜம்மு & காஷ்மீர் அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டிராவிலேயே முடியும். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஜம்மு & காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக கோப்பை வென்று வரலாற்று சாதனை படைக்க ஜம்மு & காஷ்மீர் அணி காத்திருக்கிறது.