விளையாட்டு

ஜெய்ஸ்வால் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

வேட்டையன்

விசாகப்பட்டினம்: தென் ஆப்பிரிக்க அணி உடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முழுவதுமாக வென்றது. தொடர்ந்து இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்றன.

இதனால் இந்த தொடர் 1-1 என சமனில் இருந்தது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் தொடரின் மூன்றாவது போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.

தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் தரப்பில் டிகாக் 106, பவுமா 48 ரன்கள் எடுத்தனர். ரிக்கல்டன், மார்க்ரம் மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். டெவால்ட் பிரெவிஸ் 29, மேத்யூ ப்ரீட்ஸ்கி 24 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அர்ஷ்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதானமாக இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் பிற்பாதியில் அதிரடியாக ரன் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கோலி அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஆடிய இளம் வீரரான ஜெய்ஸ்வால், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

39.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து போட்டியில் வென்றதோடு தொடரையும் வென்றது இந்தியா. தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார். ஆட்ட நாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார். வரும் 9-ம் தேதி முதல் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன.

SCROLL FOR NEXT