விளையாட்டு

வென்றால் பரிசு அளிப்பது இயல்பு... தோற்றால் அபராதம் விதிப்பதா? - பாகிஸ்தான் வாரிய ‘பிளாக் காமெடி’

ஆர்.முத்துக்குமார்

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவில்லை என்பதற்காக வீரர்களுக்கு தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் விசித்திரமானது என்பதை விட ஒரு ‘பிளாக் காமெடி’ என்றே கூற வேண்டும்.

ஒரு பள்ளிக்கூடம் பாடத்தில் ஃபெயில் ஆகும் மாணவர்களுக்கு அபராதம் விதித்தால் அது எவ்வளவு பெரிய காமெடியோ, அராஜகமோ அதேபோல் தான் இதுவும். மாணவர்கள் தோல்வியடைவதற்கு பள்ளிதான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதா?

அதேபோல தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோசமான நிர்வாகக் குளறுபடிகள், ஊழல்கள், அணித் தேர்வில் கடும் சொதப்பல்கள், வேண்டப்பட்டவர்கள் சிபாரிசில் வீரர்கள் தேர்வு, போதாக்குறைக்கு காமெடி பயிற்சியாளர்கள், கேப்டன் தேர்வில் கடும் தமாஷ்கள் இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனைக் குளறுபடிகளும் கொண்டது அந்த கிரிக்கெட் வாரியம்.

          

ஓர் ஊழல்வாத ஹெட்மாஸ்டர் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு என்ன தார்மிக நியாயம் இருக்கிறது? பல விதங்களிலும் தோல்வி அடைந்த ஒரு ‘கரப்ட்’ அமைப்பு வீரர்களுக்கு அபராதம் விதிக்க என்ன தார்மிக உரிமை இருக்கிறது?

வீரர்கள் தவறிழைக்கும்போது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பது வேறு. ஆட்டம் வரவில்லை என்பதற்காக அபராதம் விதிப்பது நகைச்சுவை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வரலாற்றில் வீரர்களின் அந்தரங்கத்தைக் கூட பாதுகாக்க மாட்டார்கள். ஒருமுறை 2009-ம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடரில் ஷோயப் அக்தர் ஆடமாட்டார், அவர் உடல் நலம் சரியாக இல்லை என்று கூறுவதோடு நிறுத்தாமல், அவர் அந்தரங்க உறுப்பில் வைரல் வார்ட்கள் வந்திருப்பதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று அப்பட்டமாக பிரஸ் ரிலீஸ் செய்ததை பல உதாரணங்களுள் ஒன்றாகக் கூறலாம்.

2009-10 ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன் 7 வீரர்கள் தடை செய்யப்பட்டனர். காரணம் ஒழுங்கின்மை, வீரர்களுக்குள் தகராறு, பயிற்சியாளர் இண்டிகாப் ஆலம் அப்போது கூறியது இன்னும் வேடிக்கை. பிளேயர்கள் உடைகளைச் சரியாக அணிவதில்லை, ஒழுங்காக உரையாட முடியவில்லை என்றெல்லாம் வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.

வடிவேலு ஜோக் ஒன்றில் வருவது போல் ‘முன்னெல்லாம் ஃபைன் போடுவாங்க, தடை போடுவாங்க, ஆனா அதுக்கு ஒரு காரணத்தைச் சொல்வாங்க... அது கொஞ்சம் ஆறுதலா இருக்கும். இப்படி தோத்துப் போனதுக்கெல்லாம் ஃபைன் போட்டா நாங்கள்ளாம் பொழப்பு தொழப்ப எப்புடிடா பார்க்கறது’ என்று இப்போது பாகிஸ்தான் வீரர்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்ற முடிவை பாகிஸ்தான் எடுத்திருந்தால் கூட பிளேயர்கள் நஷ்டம் அடைந்திருக்க மாட்டார்கள். இந்த உலகக் கோப்பையில் இந்தியா போட்டி நீங்கலாக மற்ற போட்டிகளில் நன்றாகத்தான் ஆடினார்கள். இலங்கையுடன் கூட போட்டியை வென்றனர், ஆனால் ரன் ரேட்டில் வெளியேறினர்.

தோல்விகளுக்காக அபராதம் விதிப்பது என்பது மிகவும் விந்தையான ஒரு பிளாக் காமெடி. இந்த அபராதம் இந்தியாவுக்கு எதிராக தோற்றதனால்தான் என்பது சொல்லப்படவில்லை, ஆனால் அதுதான் காரணம் என்று ஊகிக்க முடிகிறது. இத்தனைக்கும் புள்ளி விவரங்களைப் பார்த்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் 46 போட்டிகளில் 29-ல் என்று 16-ல் தோற்றுள்ளனர். இந்த வெற்றிக்கெல்லாம் பிளேயர்களுக்கு பரிசு கொடுத்தார்களா என்றால் இல்லை.

பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபர்ஹான் இந்த டி20 உலகக் கோப்பையில் ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார், ஆனால் பாவம் அவருக்கு அபராதம் 5 மில்லியன் ரூபாய்கள். ஒரேயொரு போட்டியில் ஆடிய நசீம் ஷாவுக்கும் அதே அபராதம். என்ன கேலிக்கூத்து இது? ஆனால் வீரர்கள் ஒப்பந்தத்தில் இது குறித்த விதிமுறைகள் எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை.

ஆனாலும் தோற்றதற்காக வீரர்களுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் இப்போது வலம் வரும் பெரிய ‘ஜோக்’ ஆகத் திகழ்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்ணாடியை தங்கள் முன் வைத்து சுயபரிசோதனை செய்து கொள்ளாமல் வீரர்களை பலிகடாவாக்குவது முதல் முறையல்ல. நான்கு ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக அரையிறுதி வரை பாகிஸ்தான் அணியால் வர முடியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் கீழ்நிலை. இவையெல்லாம் தோல்விகளே. ஆனால் காரணம் என்ன? யார்? தமாஷ் பயிற்சியாளர்கள், கேப்டன்களின் அணித்தேர்வு, ஆன் ஃபீல்ட் முடிவுகள் என்று பலப்பல காரணங்கள் உள்ளன, இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். இந்தியாவுடன் பொதுமைதானங்களில் ஆடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நிர்வாகக் குளறுபடிகளை, ஊழல்களை ஒழிக்க வேண்டும், இப்படி எத்தனையோ காரியங்கள் இருக்க வீரர்களுக்கா தோல்விகளுக்காக அபராதம் விதிப்பது?

SCROLL FOR NEXT