முகமது சிராஜ்
கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் கிடைக்காததை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளில் அழுது கொண்டிருந்தாரா என்று முன்னாள் இந்திய ஆஃப்-ஸ்பின்னர் முரளி கார்த்திக் வியந்தார்.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் சிராஜ் மீண்டும் 2-வது டெஸ்ட்டில் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டுள்ளார். பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக குர்னூர் பிரார் வந்துள்ளார். காம்போஜ் மீண்டும் கிரீன் டாப் பிட்சில் ஹாஃப்வாலி பந்துகளை வீசிக் கொண்டிருக்கிறார். வேகமோ 130-க்கு மேல் எப்போதாவதுதான் தாண்டுகிறது.
இன்று ஹேக்லி ஓவலில் பிந்தைய ஒளிபரப்பில், சிராஜ் கண்ணாடியணிந்தபடி சுற்றி வருவதைக் கண்ட கார்த்திக், அணியில் இடம் கிடைக்காததால் அந்த 32 வயது வேகப்பந்து வீச்சாளர் மனதளவில் சோர்வடைந்திருக்கிறாரா என்று ஐயம் எழுப்பினார்.
இதனையடுத்து ஒளிபரப்பாளர்களான சோனி ஸ்போர்ட்ஸிற்கு முரளி கார்த்திக் பேசியபோது, “சிராஜ் அழுகிறாரா? ஏனெனில் அவர் உணர்ச்சிததும்பிய நபர், அணியிலிருந்து நீக்கினால் சில வீரர்கள் ஒன்றும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சிராஜ் போன்ற உணர்ச்சிததும்பும் வீரர்கள் உண்மையில் விளையாட விரும்பும்போது நீக்கப்பட்டால் தாங்க முடியாமல் உடைந்து போவார்கள்.
அவர்கள் எப்படியிருந்தாலும் விளையாடவே விரும்புவார்கள். சிராஜ் அப்படிப்பட்ட கேரக்டர். அவரைப் போன்றவர்கள் கால்களில் வலி இருந்தாலும் சரி, தலைவலி இருந்தாலும் சரி, அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்; அணிக்காக தங்களால் முடிந்த அனைத்துப் பங்களிப்பையும் செய்வார்கள்.
ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருந்தார், சில வேளைகளில் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்வாரயிருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் கூட நிறைய தயக்கத்திற்குப் பிறகே அணியில் சேர்க்கப்பட்டார். இது நிச்சயம் ஒரு வீரரைக் காயப்படுத்தவே செய்யும்.
ஏன் அணியில் எடுக்க வேண்டும், அவர் ஃபார்மில் இல்லை, அல்லது வலையில் சரியாக வீசவில்லை என்று கருதினால் ஏன் இங்கிருந்து நியூஸிலாந்து வரை கூட்டிச் செல்ல வேண்டும்?” என்று முரளி கார்த்திக் கேள்வி எழுப்பினார்.