அகிப் நபி, இர்பான் பதான்

 
விளையாட்டு

“அகிப் நபி என்ன தவறு செய்தார்?” - இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து இர்பான் பதான் கேள்வி

வேட்டையன்

மும்பை: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கடந்த ரஞ்சி டிராபி சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜம்மு காஷ்மீர் வீரர் அகிப் நபி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி உள்ளார்.

அடுத்த மாதம் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், அகிப் நபியை ஏன் தேர்வு செய்யவில்லை என்று இர்பான் பதான் கேட்டுள்ளார்.

“அகிப் நபி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான பதில் எனக்கு தெரியவில்லை. வீரர்கள் தேர்வு முறை குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பும்ரா விளையாடாத பட்சத்தில் சிராஜ், பந்து வீச்சாளர்களின் சீனியர் பவுலராக செயல்படுகிறார். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரை ஆப்கானிஸ்தான் உடனான அந்த டெஸ்ட் போட்டியில் ஏன் விளையாட வைக்க வேண்டும். அது மாதிரியான நேரங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். அதற்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால், ஏன் அகிப் நபிக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதில் அவர் சோதித்து பார்த்திருக்கலாம்.

பவுலர்கள் பந்து வீசும் வேகம் குறித்து பலரும் பேசுவது உண்டு. அதே சமயத்தில் பேட்ஸ்மேன்களை தடுமாற செய்யும் பவுலர்களையும் கவனிக்க வேண்டும். அகிப் நபி, இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர். ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுலை தடுமாற செய்தார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது, அவரை நாம் இழப்பதற்கு இணையாகும்.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு நாம் என்ன சொல்ல வருகிறோம்? சரன்ஷ் ஜெயின் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால், ஏன் அகிப் நபிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் என்ன தவறு செய்தார்.

கடந்த ரஞ்சி சீசனில் 60 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஐபிஎல் சீசனில், மணிக்கு 133 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசி இருந்தார். ஆடும் லெவனில் 8 மற்றும் 9-வது இடத்தில் பேட் செய்யும் திறன் கொண்டவர். அப்படி இருக்கும் சூழலில் அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை” என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT