இ20 பெட்ரோல் பயன்பாடு வாகன இன்ஜினை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மத்திய அரசு

இ20 பெட்ரோல் பயன்பாடு வாகன இன்ஜினை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: இ20 பெட்ரோல் பயன்பாடு காரணமாக வாகன இன்ஜினை பாதிக்கும் அல்லது மைலேஜ் குறையும் என்பது எந்தவொரு ஆய்விலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை அன்று மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை துறை சார்ந்த வல்லுநர்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும், நீண்ட கள ஆய்வு, ஆய்வுகூட முடிவுகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பேசிய பிறகே தொடங்கினோம். இது வாகன இன்ஜினை பாதிக்கும் அல்லது மைலேஜ் குறையும் என்பது எந்தவொரு ஆய்விலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஐஐபி, எஸ்ஐஏஎம், ஏஆர்ஏஐ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் குறித்து பல ஆண்டுகள் ஆய்வு செய்தன என்று அவர் பதில் அளித்ததாக தகவல்.

எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20 பெட்ரோல்) விற்பனையை எதிர்த்து வரும் ஆக.4-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது.

இ20 பெட்ரோல்

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே இ20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது.

மாசு குறைவு, எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுவடையும் என தகவல்.

பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் 2030-ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இ20 பெட்ரோல் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.

இ20 பெட்ரோல் பயன்பாடு வாகன இன்ஜினை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: மத்திய அரசு
வசூல் குவிக்கும் ‘சென்னை லவ் ஸ்டோரி’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in