புதுடெல்லி: தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி (கேகேஆர்) வீரர் ரிங்கு சிங் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது: ரிங்கு சிங் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல ஐபிஎல் ஆட்டங்களில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் சீசனில் அவர் ஃபார்ம் சரியில்லை. 2023 சீசனில் அவர் அபாரமாக விளையாடினார். இந்த சீசனில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை. எனவே, வரும் ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்கை, கொல்கத்தா அணி எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
நடந்து முடிந்த உலகக் கோப்பையில் வருண் சக்ரவர்த்தியின் ஃபார்ம் சரியாக இல்லை. வரும் ஐபிஎல் சீசனில் அவர் எவ்வாறு செயல்பட போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.