விளையாட்டு

காயமடைந்த நட்சத்திர வீரர்களை விளையாட நிர்பந்திக்கும் ஐபிஎல் அணிகள்!

ஆர்.முத்துக்குமார்

வருண் சக்ரவர்த்திக்கு சிறிய அளவில் எலும்பு முறிவு என்று தெரிந்தும், அவரை விளையாட வைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் செயல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது, காயமடைந்தாலும் ஸ்டார் பிளேயர்களை ஐபிஎல் அணிகள் விளையாடக் கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடது பாதத்தில் வருண் சக்ரவர்த்திக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் காயம் பெரிதாகி வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ இந்த விவகாரத்தில் அணி உரிமையாளர்கள், அணி நிர்வாகக் குழுவின் முடிவில் தலையிடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வீரர்களைப் பாதுகாப்பதில் பிசிசிஐ சோடை போகிறது என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா இது தொடர்பாகக் கூறியபோது, ஐபிஎல் சீசனில் அணிகளின் முடிவில் பிசிசிஐ தலையிடுவதில்லை என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

கடந்த மே 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக வருண் சக்ரவர்த்தி காயத்துடனேயே 4 ஓவர்களை வீச வைக்கப்பட்டார். அவர் வலியால் சிரமப்பட்டதை நேரலையில் பார்க்க முடிந்தது என்பதுதான் வேதனை. பந்து வீசிவிட்டு அடுத்த பந்துக்கு அவர் தன் மார்க் நோக்கித் திரும்பிச் செல்லும்போது விந்தியபடியே சென்றதை அனைவரும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், பிடிஐ எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சைகியா, “ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, வீரர்களின் காயங்கள் மற்றும் உடற்தகுதியை உரிமையாளர்களே கவனித்துக்கொள்கிறார்கள். நிச்சயமாக, பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தின் (COE) பிசியோக்களும் அவர்களைக் கண்காணிப்பதுடன், அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பது மற்றும் அவர்களை உடற்தகுதியுடன் வைத்திருப்பது எப்படி என்பது குறித்தும் திட்டமிடுகிறார்கள்.

கண்காணிப்பு இருக்கிறது. ஆனால் ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும்போது எங்களால் அதிகமாகத் தலையிட முடியாது. இது இந்திய அணியின் நிலைமையாக இருந்திருந்தால், எங்கள் கட்டுப்பாடு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். தற்போது வீரர்கள் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை உரிமையாளர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.

தேசிய அணியைத் தேர்வு செய்யும்போது, ​​அவர்களின் உடற்தகுதி நிலையை நாங்கள் நிச்சயமாகக் கருத்தில் கொள்வோம்,” என்றார்.

இப்படி வீரர்களின் உடல்தகுதி எதிர்காலத்தை அணி உரிமையாளர்கள் கையில் கொடுக்கலாமா என்ற கேள்வியும் சர்ச்சைகளும் இதனால் கிளம்பியுள்ளன.

SCROLL FOR NEXT