லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான அதிரடி வீரர்கள் போதிய அளவில் இல்லை என்ற விமர்சனங்கள் அடிக்கடி எழுந்தபோதிலும் சஞ்சு சாம்சன், உர்வில் படேல், ருதுராஜ் கெய்க்வாட், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோரது பங்களிப்புகள் மூலம் சிஎஸ்கே அணி போராட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உர்வில் படேலின் அச்சமற்ற அணுகுமுறை, பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே-வுக்குத் தேவையான வேகத்தைச் சேர்த்துள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உர்வில் படேல் 13 பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டியிருந்தார். அந்த ஆட்டத்தில் அவர், 23 பந்துகளில், 8 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் விளாசியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க நடப்பு சீசனில் ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. லக்னோ ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் மட்டையை சுழற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டன் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் நடப்பு சீசனில் அவர், நடு ஓவர்களில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். 10 ஆட்டங்களில் 14 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். முக்கிய வீரர்கள் காயங்களால் அவதிப்பட்ட சூழ்நிலைகளில் முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சரியாகச் செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, மேற்கு இந்தியத் தீவுகளின் அகில் ஹோசைன் ஆகியோரும் தங்களது பங்கிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக ஸ்பென்சர் ஜான்சன் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
அந்த அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றி பெறுவதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும். கேப்டன் ரிஷப் பந்த் பார்மின்றி தவிப்பது அணியின் செயல் திறனை வெகுவாக பாதித்துள்ளது. அதே சமயம், அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் இலக்கைத் தற்காப்பதற்கோ அல்லது முக்கியமான கட்டங்களில் எதிரணி பேட்டர்களைக் கட்டுப்படுத்தவோ தடுமாறி வருகின்றனர்.
சிஎஸ்கேவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 203 ரன்களை குவித்த போதிலும் லக்னோ அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. ஜோஷ் இங்லிஷ், நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் ஆகியோரிடம் இருந்து நிலையான செயல்திறன் வெளிப்படவில்லை. இதில் ஜோஷ் இங்லிஷ் கடந்த ஆட்டத்தில் 33 பந்துகளில் 85 ரன்கள் விளாசியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். லக்னோ ஏகானா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
சிஎஸ்கேவில் டியான் ஃபாரெஸ்டர்
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டரான இங்கிலாந்தின் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரான டியான் ஃபாரெஸ்டரை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.
மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டியான் ஃபாரெஸ்டர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க டி 20 அணியில் அறிமுகமாகி இருந்தார். இதுவரை 5 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 83 ரன்கள் சேர்த்துள்ளார்.