அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. இருந்தபோதும், கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் குஜராத் அணி விளையாடக்கூடும்.
பேட்டிங்கில் குஜராத் அணி மிகவும் வலுவாக காணப்படுகிறது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி வருகிறார். கொல்கத்தாவுடனான கடைசி லீக் ஆட்டத்தில் கூட ஷுப்மன் கில் 49 பந்துகளில் 85 ரன்களை விளாசினார். மேலும் ஜாஸ் பட்லர், ராகுல் டெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அதிரடியாக விளையாடும்போது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மேலும் உள்ளூர் மைதானத்தில் ரசிகர்களின் உற்சாகத்துக்கு இடையே குஜராத் அணி வீரர்கள் அதிக செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். அதுபோலவே பந்துவீச்சிலும், முகமது சிராஜ், காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். எனவே, இந்த பந்துவீச்சுக் கூட்டணி சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு அதிக அழுத்தத்தைத் தரக்கூடும். அதேநேரத்தில், இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலை உள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி, 14 புள்ளிகளுடன் ராஜஸ்தானுடன் இணைந்திருக்கும். மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்.எனவே, இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள்.
பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர் ஆகியோர் தங்களது உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்ஸர் ஜான்சன், அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, அகீல் ஹொசைன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி குஜராத் அணியைக் கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே வெற்றி வசப்படும்.