மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ள மும்பை அணி எஞ்சியுள்ள ஆட்டங்களில் கணிசமான வெற்றியை பெற்று கவுரவமான வகையில் தொடரை நிறைவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் மோசமான பார்ம் அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் வெகுவாக பாதித்துள்ளது. ஹர்திக் பாண்டியா நடப்பு சீசனில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள நிலையில் பந்துவீச்சில் 4 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றி உள்ளார். சூர்யகுமார் யாதவ் 186 ரன்கள் எடுத்துள்ளார். முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வருவதும் பின்னடைவாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஹர்திக் பாண்டியாவின் தலைமைப்பண்பு குறித்த கேள்விகளும் மேலோங்கி உள்ளன. களத்தில் வியூகங்களை அமைப்பதிலும், வீரர்களின் திறனை கையாள்வதிலும் ஹர்திக் பாண்டியா திறம்பட செயல்படுவதில்லை என்ற கருத்து அதிகரித்துள்ளது.
அதேவேளையில் இந்திய டி 20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் மந்தமான நிலையைச் சந்தித்து வருகிறார். தற்போதைய சூழலில், அவர் முற்றிலும் ஃபார்மில் இல்லாமல் இல்லை. அதே சமயம், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு அதிக நேரம் களத்தில் நின்று விளையாடவும் முடியாமல் தவித்து வருகிறார்.
குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சூர்யகுமார் எதிர்கொள்ளும் சவால்கள் இப்போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. இந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 10-க்கும் சற்று அதிகமாக மட்டுமே இருப்பது கவலையளிக்கிறது.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இந்த சீசனில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.
லக்னோ அணி தனது முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த இரண்டு வெற்றிகளின் மூலம் மீண்டெழுந்தது. அதன்பிறகு அவர்கள் உத்வேகத்துடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அவர்களது அதிர்ஷ்டம் சரியத் தொடங்கியது. அவர்களது பந்துவீச்சாளர்கள் ஒரு குழுவாகச் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்களின் சுமாரான ஆட்டம் அந்த வெற்றிகளைத் தக்கவைக்க முடியாமல் போனது.
இதன் விளைவாக அந்த அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்தது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோஷின் கான் அபாரமாக பந்து வீசி 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் சூப்பர் ஓவர் வரை சென்ற அந்த ஆட்டத்தில் பார்மில் இல்லாத நிக்கோலஸ் பூரனால் லக்னோ அணி தோல்வியை சந்தித்தது.
தொடர்ச்சியான தோல்விகளால் கேப்டன் ரிஷப் பந்த் இக்கட்டான நிலையில் உள்ளார். பொதுவாகவே குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் ரிஷப் பந்த்தின் ஆட்டத்திறன் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால் தனிப்பட்ட வகையில் தனது பேட்டிங்கை முன்னேற்ற வேண்டிய நிலையிலும், அணியின் சூழலை மாற்றியமைக்க வேண்டிய சவாலையும் அவர் எதிர்கொண்டுள்ளார். அடுத்த ஏழு நாட்களில் மூன்று முக்கியமான போட்டிகளில் லக்னோ அணி விளையாட உள்ளது.