விளையாட்டு

ஐபிஎல் 2026: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

டெக்ஸ்டர்

மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

          

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அஜிங்க்ய ரஹானே மற்றும் ஃபின் ஆலன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அஜிங்க்ய ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களும், ஃபின் ஆலன் 17 பந்துகளில் 37 ரன்களும் குவித்தனர். 

மிடில் ஆர்டரில் அறிமுக வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.

221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரையான் ரிகெல்டன் ஜோடி வானவேடிக்கை காட்டியது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பழைய ஃபார்முக்குத் திரும்பி, 38 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார். அவருக்கு இணையாக விளையாடிய ரையான் ரிகெல்டன் 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இவர்களின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் மும்பையின் வெற்றியை எளிதாக்கியது.

இறுதிக்கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார். 19.1 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT