பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி பெங்களூரிலிருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தை ஏமாற்றமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்து அணிகள் பங்கேற்றுள்ள நடப்பு ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 74 ஆட்டங்கள் இந்த சீசனில் நடைபெறுகிறது. பெரும்பாலான அணிகள் முதல் சுற்றில் தலா 10 போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த வகையில் லீக் சுற்று அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த சீசனுக்கான பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை அன்று இது தொடர்பான விவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 70 லீக் போட்டிகளுக்கு பிறகு நடைபெற உள்ள பிளே ஆஃப் சுற்றின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி தரம்சாலாவில் முதல் குவாலிபையர் ஆட்டம் நடைபெறுகிறது. 27-ம் தேதி நியூ சண்டிகரில் எலிமினேட்டர் ஆட்டமும், 29-ம் தேதி அதே நியூ சண்டிகரில் இரண்டாவது குவாலிபையர் ஆட்டமும் நடைபெறுகிறது. மே 31-ம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் சொந்த மைதானத்தில் தான் அந்த சீசனின் இறுதிப் போட்டி நடைபெறும். அந்த வகையில் கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்டான பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் தான் இந்த சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற வேண்டும். அந்த வழக்கத்தை இப்போது பிசிசிஐ மாற்றி உள்ளது.
பிசிசிஐ-யின் வழிகாட்டு நெறிமுறை வரம்பிற்கு அப்பாற்பட்ட உள்ளூர் சங்கம் மற்றும் அதிகாரிகளின் சில தேவைகள் காரணமாக இந்த மாற்றம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் அது என்ன என்பது குறித்த விவரத்தை பிசிசிஐ வெளியிடவில்லை.
இந்த சூழலில் பிளே ஆஃப் சுற்றுகளை தங்கள் தரப்பு நடத்த தயார் என பிசிசிஐ வசம் கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல். கடந்த ஐபிஎல் சீசனின் போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை அடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.