தோனி பாணியில் முதல் ஐபிஎல் அரைசதத்தை கொண்டாடிய கார்த்திக் சர்மா

தோனி பாணியில் முதல் ஐபிஎல் அரைசதத்தை கொண்டாடிய கார்த்திக் சர்மா
Updated on
1 min read

சென்னை: தனது ஐபிஎல் கிரிக்கெட் அரைசதத்தை தோனி போல கொண்டாடி இருந்தார் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் கார்த்திக் சர்மா. அவரது கொண்டாட்டம் இப்போது ஐபிஎல் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சனிக்கிழமை (மே 2) அன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 18.1 ஓவர்களில் எட்டியது சிஎஸ்கே. இதில் 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவியது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக கார்த்திக் சர்மா களம் கண்டார். 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதம். இந்த சீசனுக்கு முன்னதாக 20 வயதான அவரை ரூ.14.2 கோடிக்கு சிஎஸ்கே வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானை சேர்ந்த இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். தனது முதல் அரைசதத்தை Gun-Point செலிப்ரேஷன் பாணியில் அவர் கொண்டாடி இருந்தார். அது குறித்து ஆட்டத்துக்கு பிறகு அவர் பேசினார்.

“அணிக்காக களத்தில் கடைசி வரை இருந்து வெற்றி பெற்று தர வேண்டும் என்பது மட்டுமே எனது திட்டமாக இருந்தது. ‘உனது ஆட்டத்தை ஆடினால் போதும். வேறெதுவும் வேண்டாம்’ என ருதுராஜ் என்னிடம் சொன்னார். ஆடுகளம் நிதானமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கிரிப் கிடைத்தது. அதற்கு ஏற்றபடி நாங்கள் எங்களது ஆட்டத்தை அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருந்தது.

இன்று ஆட்டத்தில் ரன் சேர்த்தால் அதை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்தேன். மற்றபடி அதில் வேறெதுவும் இல்லை” என தனது அரைச்சத கொண்டாட்டம் குறித்து கார்த்திக் சர்மா தெரிவித்தார்.

கடந்த 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 145 பந்துகளில் 183 ரன்களை இந்திய அணிக்காக விளையாடிய தோனி விளாசினார். அப்போது Gun-Point செலிப்ரேஷனில் தோனி ஈடுபட்டார். அதை இப்போது கார்த்திக் சர்மா ரீ-கிரியேட் செய்துள்ளார். தோனி, கார்த்திக் என இருவரும் இப்போது சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தோனி பாணியில் முதல் ஐபிஎல் அரைசதத்தை கொண்டாடிய கார்த்திக் சர்மா
நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் நிலைமை மோசம் - பாகிஸ்​தான் அமைச்சர் ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in