புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் 142 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி ஒரு கட்டத்தில் 4.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பரிதவித்தது.
எனினும் 22 வயதான சமீர் ரிஸ்வி 47 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், அனுபவம் வாய்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில், 39 ரன்களும் சேர்த்து 17 பந்துகளை மீதம் வைத்து வெற்றி தேடிக்கொடுத்திருந்தனர்.இதில் சமீர் ரிஸ்வி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படத்தவறிய கே.எல்.ராகுல், பதும் நிசங்கா, நித்திஷ் ராணா, அக்சர் படேல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பின்வரிசையில் விப்ராஜ் நிகாம், டேவிட் மில்லர் ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தால் பலம் சேர்க்கக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நடராஜன் லக்னோ அணிக்கு எதிராக 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதேபோன்று லுங்கி நிகிடி, குல்தீப் யாதவ் ஆகியோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தனர். முகேஷ் குமார், அக்சர் படேல் ஆகியோர் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தனர்.
இவர்கள் மும்பை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கக்கூடும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் 221 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி ரோஹித் சர்மா விளாசிய 78 ரன்கள் மற்றும் ரியான் ரிக்கெல்டன் சேர்த்த 81 ரன்கள் உதவியுடன் எளிதாக வெற்றியை வசப்படுத்தியது.
இவர்களுடன் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்டவர்கள். பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துதல் தாக்குர் ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ராஜஸ்தான் - குஜராத் மோதல்
இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.