சென்னை: சென்னையில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஜனவரி 9-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை சென்னை கால்பந்து சங்கம் நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு சிஎப்ஏ-திலக் மோதி யுசி பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரியமேட்டிலுள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்துக்கு அருகிலுள்ள கண்ணப்பர் திடலில் போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் வெல்லும் அணிக்கு கேர்டுகேதர் கோப்பை பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் எம்சிசி மேல்நிலைப்பள்ளி, மாதவரம் அரசு மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் டான் பாஸ்கோ, ஜிஎம்டிடிவி மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பீட்ஸ் சிபிஎஸ்இ பள்ளி, செயின்ட் பாட்ரிக்ஸ் மேல்நிலைப்பள்ளி, மதரஸா-இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி, பவன்ஸ் ராஜாஜி, மணலி அரசு மேல்நிலைப்பள்ளி, எம்சிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் டான் பாஸ்கோ ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளன.
இதுதவிர சென்னை கால்பந்து சங்கம் சார்பில் நடைபெறும் 2, 3, 4-வது டிவிஷன் கால்பந்துப் போட்டிகளும் ஜனவரி 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. சென்னை கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.