

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இதனால் அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
பிங்க் பால் டெஸ்ட் போட்டியாக இது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 384 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 160 ரன்கள் விளாசினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 129 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் தொடங்கினர்.
மேலும் 9 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழந்தார். 220 பந்துகளில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் அவர் 138 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஷ் டங் பந்தில், ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார்.ஸ்காட் போலண்ட் 0, மிட்செல் ஸ்டார்க் 5 ரன்களில் வீழ்ந்தனர். அதிரடியாக விளையாடிய பியூ வெப்ஸ்டர் 87 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 133.5 ஓவர்களில் 567 ரன்களில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்தின் பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 3, பென் ஸ்டோக்ஸ் 2, வில் ஜேக்ஸ், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராவ்லி ஒரு ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 42 ரன்களில் அவுட்டானார். ஜோ ரூட், 2-வது இன்னிங்ஸில் 6 ரன்களில், போலண்ட் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த ரூட், 2-வது இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றியது.
ஹாரி புரூக் 42, வில் ஜேக்ஸ் 0, ஜேமி ஸ்மித் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1, பிரைடன் கார்ஸ் 16 ரன்களில் வீழ்ந்தனர்.ஆனால் ஒரு முனையில் நங்கூரம் போல நின்று விளையாடிய ஜேக்கப் பெத்தேல் சதம் விளாசினார். 162 பந்துகளில் அவர் இந்த சதத்தை எட்டினார்.
ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களைக் குவித்துள்ளது. ஜேக்கப் பெத்தேல் 142 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் பியூ வெப்ஸ்டர் 3, ஸ்காட் போலண்ட் 2, மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நேசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடவுள்ளது.