விளையாட்டு

இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: டி20 தொடரை 5-0 என வென்றது

வேட்டையன்

திருவனந்தபுரம்: இலங்கை உடனான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 15 ரன்களில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுவதுமாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் விசாகப்பட்டினத்திலும், அடுத்து மூன்று போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெற்றது.

இந்த தொடரின் கடைசி போட்டி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத், 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

176 ரன்கள் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 65 மற்றும் இமேஷா 50 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை அணி. இதனால் 15 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுவதுமாக வென்றுள்ளது இந்தியா. ஷெபாலி வர்மா தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT