

நடிகை சன்னி லியோன்
மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடிகை சன்னி லியோன் பங்கேற்க இருந்த ‘புத்தாண்டு 2026’ நிகழ்வுக்கு மத ரீதியிலான சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அது ரத்து ஆகியுள்ளது.
புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் சில மணி நேரம் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மதுபான விடுதியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு வெளியானதும் இந்த நிகழ்வுக்கு மத ரீதியான அமைப்புகள் மற்றும் ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘புனித பூமியான மதுராவில் இந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது. இது ஏற்புடையது அல்ல என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், மதுராவின் கலாச்சார ரீதியான புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அமைப்பு தெரிவித்தது.
தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இதன் ஏற்பாட்டாளர்களே அதை இப்போது ரத்து செய்துள்ளனர். உள்ளூர் அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு இப்போது சமூக அமைப்புகள் நன்றி தெரிவித்து வருகின்றன.