விளையாட்டு

கத்தார் கால்பந்து அணிக்கு எதிராக இந்திய யு-17 அணி 2 ஆட்டத்தில் மோதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய யு-17 ஆடவர் கால்பந்து அணி கத்தார் அணிக்கு எதிராக நட்புரீதியாக 2 ஆட்டங்களில் விளையாடும் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. இந்த ஆட்டங்கள் வரும் 25 மற்றும் 28-ம் தேதிகளில் தோஹாவில் நடைபெறுகிறது.

இந்த 2 ஆட்டங்களும் இந்திய அணிக்கு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள யு-17 ஆசியக் கோப்பை தொடருக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு உதவக்கூடும். நட்புரீதியிலான இந்த 2 ஆட்டங்களும் ரசிகர்கள் பார்வையிட அனுமதி கிடையாது.

இந்தியு யு-17 கால்பந்து அணி தற்போது ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாடி வருகிறது. தாய்லாந்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி கத்தாருக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடுவதற்காக வரும் 24-ம் தேதி தோஹா புறப்பட்டுச் செல்கிறது.

கத்தாருக்கு எதிரான போட்டிகளை முடித்துக் கொண்டு 30-ம் தேதி இந்திய அணி, சவூதி அரேபியா புறப்பட்டுச் செல்லும். அங்குதான் யு-17 ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மே 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 10-ம் தேதி உஸ்பெகிஸ்தானுடனும், 13-ம் தேதி கொரியாவுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.

SCROLL FOR NEXT