இந்திய டென்னிஸ் வீராங்கனை மாயா
புதுடெல்லி: போர்ச்சுகலில் உள்ள லாகோஸ் நகரில் மகளிருக்கான டபிள்யூ 35 லாகோஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான 17 வயதாகும் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ஸ்பெயினின் செலியா செர்வினோ ரூயிஸை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் மாயா 6–4, 6–2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற இளம் இந்திய வீராங்கனை (17 வயது, 3 மாதங்கள்) என்ற பெருமையைப் பெற்றார் மாயா.
இதற்கு முன்னர் 17 வயது 10 மாதங்களில் பட்டம் வென்ற சானியா மிர்ஸா வசம் இந்தச் சாதனை இருந்தது. தற்போது இந்த சாதனையை மாயா முறியடித்துள்ளார். லாகோஸ் தொடரில் மாயா தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறிய நிலையில் ஒரு செட்டை கூட இழக்காமல் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்றுள்ளார்.
இந்தத் தொடரில் இரட்டையர் பிரிவிலும் அவர், கோப்பையை வென்று அசத்தி உள்ளார். இரட்டையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை யெலிசவெட்டா கோட்லியாருடன் இணைந்து மாயா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஜோடி இறுதிப் போட்டியில் 0-6, 6-2 (10-7) என்ற செட் கணக்கில் சீனாவின் மின் லியு, இத்தாலியின் கார்லோட்டா மோசியா ஜோடியை வீழ்த்தியது.
மாயா ராஜேஸ்வரன் ரேவதி தமிழகத்தின் கோவை மாவட்டம் காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர். மாயா என்பதுதான் அவரது பெயர். ராஜேஸ்வரன் - ரேவதி என்பது அவரது பெற்றோர் பெயர். தன் பெயருடன் பெற்றோர் பெயரையும் சேர்த்து அதனையும் தன் பெயராக அடையாளப்படுத்தியுள்ளார். தற்போது சானியா மிர்ஸாவின் சாதனையை முறியடித்துள்ளதன் மூலம் இந்திய டென்னிஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார் இளம் புயலான மாயா.
போர்ச்சுகல் போட்டி வெற்றிக்கு பின்னர் மாயா ராஜேஷ்வரன் ரேவதி கூறியதாவது:
இது எனது முதல் பட்டம் என்பதால், எனது பயணத்தின் தொடக்கமாகவே இதை பார்க்கிறேன். தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இது ஒரு நல்ல அறிகுறி.
இந்த வெற்றி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் நினைக்கவில்லை. இது ஆரம்பம்தான். ஆனால், என்னால் இன்னும் சிறப்பாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எனக்கு அளித்துள்ளது.
மகளிர் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதே எனது இலக்கு. நான் என்மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். இன்னும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தரத்தில் சிறப்பாக விளையாடிய பிறகு, அடுத்த முறை களமிறங்கும்போதும் என்னால் அதைச் செய்ய முடியும், இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்க வேண்டும்.
நான் அதிகமான போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். அதே நேரத்தில், சில காலம் பயிற்சியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளேன். தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். உடல்ரீதியாக வலிமையை அதிகரிக்க வேண்டும். காயங்களைத் தவிர்த்து, மைதானத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும். எனவே, அடுத்த சில மாதங்களில் உடற்தகுதியை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவேன்.
சானியா மிர்ஸாவை யாராலும் மிஞ்சிவிட முடியாது என்று நினைக்கிறேன். அவர் ஒரு ஜாம்பவான், எப்போதும் ஜாம்பவானாகவே இருப்பார். பல விஷயங்களில் நான் அவரைப் பார்த்து ஊக்கம் பெறுகிறேன். நான் வளர்ந்து வந்த காலத்தில் எனக்கு முன்மாதியாக இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை மக்கள் மத்தியில் அதிகம் அறியச் செய்தவர் அவர்.
லாகோஸ் போட்டியில் நான் வெற்றி பெறுவேன் என்ற எதிர்பார்ப்புடன் வரவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினேன். இந்தப் போட்டியில் குறைந்த வாய்ப்புள்ள வீராங்கனையாகவே நான் கருதப்பட்டேன். ஆனால், எனது எதிராளிகளைவிடச் சிறப்பான டென்னிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.
நெருக்கடியான தருணங்களிலும் ஆட்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை இந்தப் போட்டியின் மூலம் கற்றுக்கொண்டேன். இவ்வாறு மாயா ராஜேஷ்வரன் ரேவதி கூறினார்.
‘நடால் அகாடமியில் இல்லை’
தனது பயிற்சி மையத்தை மாயா மாற்றி உள்ளார். ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடாலின் டென்னிஸ் அகாடமியிலிருந்து சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு வெளியேறிய மாயா, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள எலைட் டென்னிஸ் சென்டரில் இணைந்தார். அந்த மையத்தின் நிறுவனரும் தலைமைப் பயிற்சியாளருமான ஜீன்-ரெனே லிஸ்னார்டின் வழிகாட்டுதலின்படியே லாகோஸ் போட்டியில் மாயா விளையாடினார்.
நடால் அகாடமியிலிருந்து வெளியேறியது குறித்து மாயா கூறும்போது, “எனது எதிர்காலத்துக்கு எது சிறந்ததாக இருக்கும் என்பதைப் பற்றி பல்வேறு விஷயங்களை ஆலோசித்தோம். எலைட் டென்னிஸ் சென்டர்தான் எனக்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று முடிவு செய்தோம்” என்றார்.