லக்னோ: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஷுப்மன் கில் காயம் அடைந்துள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் ஷுப்மன் கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை. இந்தத் தொடரில் அவர், கூட்டாக 32 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இந்நிலையில் 4-வது போட்டிக்காக ஷுப்மன் கில் லக்னோ மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கால் விரலில் காயம் அடைந்தார். விரல் பகுதியில் வலியும், வீக்கமும் உள்ளது.
இதனால் அவர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காயம் காரணமாக நேற்று 4-வது டி20 போட்டி நடைபெற்ற லக்னோ மைதானத்துக்கு ஷுப்மன் கில் இந்திய அணியுடன் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.