

லக்னோ: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்தானது. இந்த ஆட்டம் புதன்கிழமை அன்று லக்னோவில் நடைபெறுவதாக இருந்தது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி உடனான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது. ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் 4-வது டி20 போட்டி புதன்கிழமை அன்று லக்னோவில் நடைபெறுவதாக இருந்தது. இரு அணி வீரர்களும் ஆட்டத்துக்கு தயாராகும் விதமாக பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மைதானத்தில் கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.
நடுவர்கள் பல்வேறு முறை ஆட்டத்தை நடத்தும் சாத்தியம் உள்ளதா என கள ஆய்வு செய்தனர். பின்னர் இரவு 9.30 மணி அளவில் பனிமூட்டம் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் வரும் வெள்ளிக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.