விளையாட்டு

”இந்திய அணி மிகவும் ஆபத்தானது” - எம்.எஸ்.தோனி கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்குகிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் இரு முறை சாம்​பிய​னான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் அமெரிக்கா​வுடன் 7-ம் தேதி மோதுகிறது.

இந்​தத் தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி பேட்​டிங், பந்​து​வீச்​சில் முழுபலத்​துடன் களமிறங்​கு​கிறது. இதனால் இந்​திய அணி டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் முதன்​முறை​யாக சாம்​பியன் பட்டத்தை தக்​க​வைத்​துக் கொள்ள வாய்ப்பு இருப்​ப​தாக கருதப்​படு​கிறது.

          

இந்​நிலை​யில் தனி​யார் நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான எம்.எஸ்​.தோனி கூறிய​தாவது:

இந்​திய அணி மிக​வும் ஆபத்​தான அணி​களில் ஒன்​றாக இருக்​கிறது. ஒரு நல்ல அணிக்கு என்ன தேவையோ அனைத்​துமே இங்கு இருக்​கிறது. டி20 போட்​டிக்​கான அனுபவம் மிக்க வீரர்​கள் பலர் இருக்​கிறார்​கள். அவர்​கள், நெருக்​கடி​யான சூழ்​நிலைகளில் விளை​யாடி​யுள்​ளனர். எனக்​குக் கவலை அளிக்​கும் விஷ​யம் என்​னவென்​றால் பனிப் பொழி​வு​தான்.

போட்​டி​யின் போது பனிப்​பொழி​வால் ஏற்​படும் ஈரப்​ப​தம் எனக்கு பிடிக்​காது. பனிப்​பொழிவு பல விஷ​யங்​களை மாற்​றி​விடும். நான் விளை​யாடிக்​கொண்​டிருந்த காலங்​களில்​கூட, பனிப்​பொழிவு என்னை மிக​வும் பயமுறுத்தியது. அது டாஸை மிக​வும் முக்​கிய​மான​தாக மாற்​றி​விடும்.

தற்​போதைய சூழ்​நிலை​யில் இந்​திய அணி​யில் உள்ள எந்த வீரரும் காயமடையக் கூடாது. என்​னென்ன பொறுப்பு​கள் கொடுக்​கப்​பட்​டாலும், அதை வீரர்​கள் அணிக்​காக நிறைவேற்ற வேண்​டும். இதில், நான் எது​வும் சொல்லி அது தவறாகி விடக்​கூ​டாது. ஆனால், இந்​திய அணி மிக​வும் ஆபத்​தானது.

2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் ஏன் விளை​யாடக்​கூ​டாது. என்​னைப் பொறுத்​தவரை வயது என்​பது தகுதி கிடை​யாது. உடல்​நலம், செயல்​திறன் மட்டுமே முக்​கிய​மான தகு​தி. இந்த விஷ​யத்​தில் யாருமே எது​வும் சொல்​லக்​கூ​டாது என்றே நான் எப்​போதும் நினைப்பேன்.

ரோஹித் சர்​மா, விராட் கோலி அல்​லது அடுத்த ஐந்து ஆண்டு​களில் வரவிருக்​கும் மற்ற வீரர்​களாக இருக்​கட்​டும் அவர்​கள் அடுத்த உலகக் கோப்​பை​யில் விளை​யாட முடியுமா முடி​யாதா என்​பதை நாம் தீர்​மானிக்க முடி​யாது, அதை அவர்​கள்​தான் தீர்​மானிக்க வேண்​டும். அவர்​கள் தொடர்ந்து சிறப்​பாக விளை​யாடி​னால், நாட்​டிற்​காகச் சிறப்​பாகச் செயல்பட வேண்​டும் என்ற உத்​வேகம் அவர்களிடம் இருந்​தால், ஏன் விளை​யாடக்​கூ​டாது?

அனுபவம் வாய்ந்த வீரர்​கள் நமக்கு கிடைக்க மாட்டார்கள். ஒரு​வர் சச்​சின் டெண்​டுல்​க​ராக இல்லாவிட்டால், 20 வயதில் அனுபவம் மிக்க வீர​ராக இருக்க வேண்​டும் என்​பதை எதிர்​பார்க்க முடி​யாது. 16 அல்லது 17 வயதில் விளை​யாட தொடங்​கி​னால் மட்​டுமே 20 வயதில் அனுபவம் வந்​திருக்​கும். 20 அல்​லது 25 போட்டிகள் விளை​யாடிய​வர்​கள் எல்​லாம் அனுபவசாலிகள் எனக் கூற முடி​யாது.

80 அல்​லது 85 போட்​டிகள் விளை​யாடி​னால்​தான் அனுபவம் வரும். அப்​போது​தான் நமக்கு நமது உணர்​வு​களை, அழுத்தங்​களை எப்​படி சமாளிப்​பது என்று தெரி​யும். அனுபவ​மும் இளம் வீரர்​களும் கலந்த கலவை​யாக அணி இருப்​பது முக்​கி​யம் என்று நினைக்​கிறேன்.

அணி​யில் அனை​வரை​யும் சமமாக நடத்​துங்​கள். சிறப்பாகச் செயல்​படு​பவர்​கள் அணி​யில் இருப்​பார்​கள். சிறப்​பாகச் செயல்​ப​டாதவர்​கள் இருக்க மாட்​டார்​கள். ஒருவர் உடற்​தகு​தி​யுடன் இல்​லை​யெனில் அவரை எந்த நேரத்​தில் வேண்​டு​மா​னாலும் நீக்​கலாம் அல்​லது சரி​யாக விளை​யாட​விட்​டால் நீக்​கலாம். அதனால், ஒரே தகு​தி​தான். நன்​றாக விளை​யாடி உடல்​ நலத்​துடன்​ இருந்​தால்​ தொடர்ந்​து விளை​யாடலாம்​. இவ்​வாறு தோனி கூறி​னார்​.

SCROLL FOR NEXT