சென்னை: ஐயன்மேன் 5150 டிரையத்லான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 6 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் உட்பட மொத்தம் 650 வீரர்கள் பங்கேற்றனர். எனினும் அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர். கடலில் நிலவிய சவாலான சூழ்நிலை காரணமாக நீச்சல் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, 5 கிலோ மீட்டர் ஓட்டம், 40 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என மாற்றியமைக்கப்பட்ட முறையில் போட்டி நடத்தப்பட்டது.
டிரையத்லான் ஆடவருக்கான பொதுப் பிரிவில் ஆதர்ஷ் 2:05:14 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். ராஜ்குமார் பவார் (2:08:21) 2-வது இடமும், குந்த்ரக்பம் இங்கம்பா மீடேய் (2:11:08) 3-வது இடமும் பிடித்தனர். மகளிர் பிரிவில் ஆர்த்தி நைனார் 2:55:23 என்ற விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடத்தைப் பிடித்தார். கார்த்திகா ராஜாராம் (2:55:57) 2-வது இடமும், தீபா ராமகிருஷ்ணன் (2:58:28) 3-வது இடமும் பிடித்தனர்.
ரிலே பிரிவில் எஸ்ஓஎல் பிட்னஸ் குழுவினர் 2:21:36 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தனர். பாஸ் ஆஃப் டிரி குழுவினர் 2-வது இடத்தையும், 5121 ஸ்டிரைவர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர். டிரையத்லானுடன் இணைந்து நடைபெற்ற ‘டூயோஸ்கா டூயத்லான்’ போட்டியில், ஆடவருக்கான ஸ்டாண்டர்ட் பிரிவில் சப்பன் பஞ்சால் (2:06:05) முதலிடமும், மகளிர் பிரிவில் மோகனதேவி (3:19:26) முதலிடமும் பிடித்தனர். ஆடவருக்கான ஸ்பிரிண்ட் பிரிவில் லோகிதாஸ் ராஜசேகரன் முதலிடமும், மகளிர் பிரிவில் அனீ வர்மா முதலிடமும் பிடித்தனர்.