இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்க வேண்டும்: இந்தியா அழுத்தம் தர பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated on
2 min read

சென்னை: இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமை களையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருவது எனது கடமை. இலங்கைத் தமிழர்கள் 77ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை சகித்து வந்துள்ளனர். பலர், இதனை இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது.

சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972 மற்றும் 1978-ம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது. உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளாக இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள், தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழி வகுத்து வருகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், இனப் பிரச்சினைகளை தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி மாதிரியை வலுப்படுத்துவதாக தெரிகிறது. இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களை புறக்கணித்து, அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இந்தச்சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதி பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்), வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்) தமிழ் தேசத்துக்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை) மற்றும் மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும். பாகுபாடின்மையையும் உறுதி செய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல் போன்றவற்றையே இந்த கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.

இந்தக் கூறுகளை உள்ளடக்காத புதிய அரசியலமைப்பானது அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும். 1987-ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தமிழகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லட்ச கணக்கான மக்கள், அங்குள்ளவர்களை தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்பு செயல் முறையினை கொண்டு வருவதற்கு, இந்திய அரசாங்கம் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் செய்யும், இன சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும், பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இத்தகைய அணுகுமுறை நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒருமித்திருக்கும். அந்த வகையில் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>முதல்வர் மு.க.ஸ்டாலின்</p></div>
கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு விஜய் இன்று ஆஜராகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in