கட்டாக்: 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று கட்டாக்கில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியின் ஓபனிங் வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஆடினர்.
இதில் அபிஷேக் சர்மா 17 ரன்களும், கில் 4 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 26 ரன்களும், அக்சர் படேல் 23 ரன்களும் எடுத்தனர்.
அடுத்ததாக இறங்கிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அசத்தினார். ஷிவம் துபே 11, ஜிதேஷ் சர்மா 10 என இந்திய அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது. ஹர்திக், ஜிதேஷ் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. ஓபனிங் இறங்கிய குயின்டன் டிகாக் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
எய்டன் மார்க்ரம் 14, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14, டிவால்ட் ப்ரெவிஸ் 22, டேவிட் மில்லர் 1, டோனோவன் ஃபெரீரா 5 என மிக மோசமான அட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியது. 12.3 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.