டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதியில் கடும் அச்சுறுத்தல் கொடுத்த ஜேக்கப் பெத்தேல் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்.
மும்பை: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் மிட்
ஆன் திசையில் பவுண்டரி ஒன்றையும், லெக் திசையில் சிக்ஸர் ஒன்றையும் பறக்கவிட்டார். முதல் ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. வில் ஜேக்ஸ் வீசிய 2-வது ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டிய அபிஷேக் சர்மா கடைசி பந்தை லெக் திசையில் தூக்கி அடித்த போது பில் சால்ட்டிடம் கேட்ச் ஆனது.
7 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சஞ்சு சாம்சன், அடுத்த பந்தை மிட் ஆன் திசையை நோக்கி வலுவாக அடித்தார். அப்போது அங்கு நின்ற ஹாரி புரூக் கேட்ச்சை தவறவிட்டார். இதை சாம்சன் பயன்படுத்திக் கொண்டு 4-வது பந்தை சிக்ஸருக்கும், கடைசி பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டன.
வில் ஜேக்ஸ் வீசிய 4-வது ஓவரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் தலா ஒரு பவுண்டரி விரட்ட 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜேமி ஓவர்டன் வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளை விரட்டினார். சேம் கரண் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகள் அடித்தார். பவர்பிளேவில் இந்திய அணி 67 ரன்கள் சேர்த்தது.
லியாம் டாவ்சன் வீசிய 8-வது ஓவரில் சஞ்சு சாம்சனும், இஷான் கிஷனும் தலா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர். இதனால் இந்திய அணி 8.3 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில், 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரை சதம் கடந்தார். இது அவரது 5-வது அரை சதமாக அமைந்தது. சேம் கரண் வீசிய 9-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு சிக்ஸரும் சஞ்சு சாம்சன் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியையும் விரட்டினர். இந்த ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டன.
ஆதில் ரஷித் வீசிய 10-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இஷான் கிஷன் அடுத்த பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது வில் ஜேக்ஸிடம் கேட்ச் ஆனது. 18 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஜோடி 45 பந்துகளில் 97 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபேவும் மட்டையை சுழற்றினார். 10 ஓவர்களில் இந்திய அணி 119 ரன்கள் குவித்தது. ஜேமி ஓவர்டன் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தை சஞ்சு சாம்சன் லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விளாசினார். ஆதில் ரஷித் வீசிய 12-வது ஓவரில் சஞ்சு சாம்சனும், ஷிவம் துபேவும் தலா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர்.
தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 13-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை விளாசினார். மட்டையை சுழற்றி சஞ்சு சாம்சன் 42 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசிய நிலையில் வில் ஜேக்ஸ் பந்தை டீப் கவர் திசையில் விளாசிய போது பில் சால்ட்டிடம் கேட்ச் ஆனது. அப்போது ஸ்கோர் 13.1 ஓவர்களில் 160 ஆக இருந்தது.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஜோடி 22 பந்துகளில், 43 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆதில் ரஷித் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபேவும், 3-வது பந்தை சூர்யகுமார் யாதவும் சிக்ஸருக்கு பறக்கவிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 6 பந்துகளில், 11 ரன்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். ஜேமி ஓவர்டன் வீசிய 17-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகளை விரட்ட இந்திய அணி 200 ரன்களை கடந்தது. சேம் கரண் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் விளாசிய நிலையில் ஹாரி புரூக்கின் துல்லியமான ‘த்ரோவால்’ ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து திலக் வர்மா களமிறங்க இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 5-வது பந்தில் போல்டானார். திலக் வர்மா 7 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் விளாசினார். இதன் பின்னர் அக்சர் படேல் களமிறங்கினார். இந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டன.
வில் ஜேக்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் வருண் சக்ரவர்த்தி பைஸ் வாயிலாக 2 ரன்கள் சேர்த்தார். முடிவில் 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜேக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 254 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. பில் சால்ட் 5 ரன்னில் ஹர்திக் பாண்டியா பந்திலும், ஹாரி புரூக் 7 ரன்னில் ஜஸ்பிரீத் பும்ரா பந்திலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல் இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வருண் சக்ரவர்த்தி வீசிய 6-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதே ஓவரின் கடைசி பந்தில் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் வருண் பந்தில் போல்டானார்.
அதிரடியாக விளையாடிய ஜேக்கப் பெத்தேல் 19 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டாம் பேன்டன் 5 பந்துகளில், 17 ரன்கள் விளாசிய நிலையில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் மட்டையை சுழற்றினார். இந்த ஜோடியின் அதிடியால் இங்கிலாந்து அணி 12.2 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.
வில் ஜேக்ஸ் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஃபுல்டாஸ் பந்தை டீப் கவர் திசையில் சிக்ஸரை நோக்கி விளாசினார். அப்போது அக்சர் படேல் எல்லைக்கோட்டுக்கு அருகே பந்தை பாய்ந்து பிடித்தார். ஆனால் நிலை தடுமாறிய அவர், பந்தை உள்ளே தூக்கி வீசியபடி எல்லைக்கோட்டுக்கு வெளியே விழுந்தார். அப்போது ஷிவம் துபே அதை கேட்ச் செய்ததால் ஜேக்ஸ் ஆட்டமிழந்தார்.
அப்போது ஸ்கோர் 14 ஓவர்களில் 172 ஆக இருந்தது. இதையடுத்து சேம் கரண் களமிறங்கினார். கடைசி 6 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 82 ரன்கள் தேவையாக இருந்தது. வருண் சக்ரவர்த்தி வீசிய 15-வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 8 ரன்களை மட்டுமே வழங்கினார். கடைசி 24 பந்துகளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.
அர்ஷ்தீப் சிங் வீசிய 17-வது ஓவரில் ஜேக்கப் பெத்தேல் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி மிரட்டினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது. 18-வது ஓவரை வீசிய பும்ரா 6 ரன்களை மட்டுமே வழங்கினார். இதனால் கடைசி 12 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஹர்திக் பாண்டியா வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் பெத்தேல் சிக்ஸர் விளாசினார்.
இந்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகே அக்சர் படேல் ஒற்றை கையால் கேட்ச் செய்ய முயன்றார். ஆனால் பந்து அவரது கையில் பட்டு எல்லைக்கோட்டை தாண்டியது. 3-வது பந்தை சேம் கரண் சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு அருகே திலக் வர்மாவிடம் கேட்ச் ஆனது. சேம் கரண் 14 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஜேமி ஓவர்டன் களமிறங்கினார். இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவையாக இருந்தது.
ஷிவம் துபே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ஜேக்கப் பெத்தேல் 2 ரன்கள் சேர்க்க முயன்ற போது ரன் அவுட் ஆனார். ஜேக்கப் பெத்தேல் 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். அவர், ஆட்டமிழந்த பின்னரே இந்திய அணி பெருமூச்சுவிட்டது. இதையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். அடுத்த இரு பந்துகளிலும் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் பின்னர் ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
எனினும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 19, ஜேமி ஓவர்டன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்கள் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
200+ சிக்ஸர்கள்: டி 20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் வீசிய பந்துகளில் இந்திய அணி வீரர்கள் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தனர். இதன் மூலம் சர்வதேச டி 20 அரங்கில் 200+ சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார் ஆதில் ரஷித்.
தப்பித்த சாம்சன்: சஞ்சு சாம்சன் 15 ரன்களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் கொடுத்த பந்தை ஹாரி புரூக் தவறவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மிரட்டினார்.
கோலி சாதனை சமன்: டி 20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் விராட் கோலியுடன் சாதனையை பகிர்ந்து கொண்டார். விராட் கோலி 2016-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 89* ரன்கள் விளாசியிருந்தார். இந்த வகை சாதனையில் நியூஸிலாந்தின் பின் ஆலன் 100 ரன்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
அதிக 250+ ஸ்கோர்: டி20 போட்டிகளில் அதிக முறை 250-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் குவித்த அணிகள் வரிசையில் இந்தியா (6 முறை) முதலிடம் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறையும், மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, சர்ரே அணிகள் தலா 3 முறையும் 250-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளன.
தோனியும்.. துபேவும்.. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிவம் துபே ரன் அவுட்டானார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர், ரன் அவுட் முறையில் ஆட்டமிழப்பது இது 3-வது முறையாகும். இந்த வகையில் 2007-ம் ஆண்டு தொடரில் தோனியும் 3 முறை ரன் அவுட்டாகி இருந்தார்.
’சிக்ஸர் சாம்சன்’-ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா(15 சிக்ஸர்கள்) 2-வது இடத்திலும், ஷிவம் துபே (15 சிக்ஸர்கள்) 3-வது இடத்திலும், இஷான் கிஷன் (14 சிக்ஸர்கள்) 4-வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா (14 சிக்ஸர்கள்) 5-வது இடத்திலும், யுவராஜ் சிங் (12 சிக்ஸர்கள்) 6-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா சிக்ஸர் வேட்டை: நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 88 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் (76 சிக்ஸர்-2026), தென் ஆப்பிரிக்கா (72 சிக்ஸர்-2026), மேற்கு இந்தியத் தீவுகள் (62 சிக்ஸர்-2024), இந்தியா (61 சிக்ஸர்-2024) உள்ளது.