விளையாட்டு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

செய்திப்பிரிவு

தரம்சாலா: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணி​கள் இடையி​லான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்​சாலா​வில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது.

ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையே நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 300 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டி கொண்ட தொடரை கைப்​பற்​றியது. இதைத் தொடர்ந்து இரு அணி​களும் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் விளை​யாட உள்​ளன.

இதன் முதல் ஆட்​டம் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு தரம்​சாலா​வில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் சீனியர் நட்​சத்​திர​மான விராட் கோலி, ஆல்​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் காயம் காரண​மாக விளை​யாட​வில்​லை. அதேவேளை​யில் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா முழு உடற்​தகு​தி​யுடன் களமிறங்குகிறார்.

பாண்​டியா இல்​லாத​தால் நித்​திஷ் குமார் ரெட்டி மீது அனை​வரது பார்​வை​யும் திரும்​பக்​கூடும். வரும் 2027-ம் ஆண்டு அக்​டோபர்​-நவம்​பர் மாதங்​களில் தென் ஆப்​பிரிக்​கா​வில் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் நடை​பெறுகிறது. இதற்​காக இந்​திய அணி தற்​போதே திட்​ட​மிடத் தொடங்கி உள்​ளது. உலகக் கோப்பை தொடரில் 39 வயதாகும் ரோஹித் சர்மா விளை​யாடு​வா​ரா? என்​ப​தில் இன்​னும் சந்​தேகம் நீடித்து வரு​கிறது.

இந்த முக்​கி​யத் தொடருக்கு முன்​ன​தாக இந்​திய அணி சுமார் 25 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாட திட்​ட​மிட்​டுள்​ளது. இந்த காலக்​கட்​டத்​தில் இந்​திய அணி பல்​வேறு அணி சேர்க்​கைகளை சோதித்துப் பார்க்​கக்​கூடும். அந்த வகை​யில் ஆப்கானிஸ்தானுக்கு எதி​ரான தொடரும் கவனம் பெற்​றுள்​ளது.

இது ஒரு​புறம் இருக்க ஷுப்​மன் கில்​லின் கேப்​டன்​சி​யில் இந்​திய அணி 3 தொடர்​களில் 2 தோல்வி​களைச் சந்​தித்​துள்​ளது. இதனால் கேப்​ட​னாக தனது செல்​வாக்கை வலுப்​படுத்​திக் கொள்​ளும் வகையில் ஷுப்​மன் கில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்படுத்து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

இன்​றைய ஆட்​டத்​தில் தொடக்க வீரர்​களாக ரோஹித் சர்​மா​வும், ஷுப்​மன் கில்​லும் களமிறங்​கக்​கூடும். 3-வது இடத்​துக்கு இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் ஆகியோரிடையே போட்டி நிலவக்கூடும். 4-வது இடத்​தில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்​கக்​கூடும். இவர்​களை தொடர்ந்து விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னாக கே.எல்​.​ராகுல், ஆல்​ர​வுண்​ட​ராக நித்​திஷ் குமார் ரெட்டி இடம்பெறுவார்கள்.

சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக வாஷிங்​டன் சுந்​தரும், பிர​தான சுழற்​பந்து வீச்​சாள​ராக குல்​தீப் யாத​வும் களமிறங்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெறு​வார்​கள்.

3-வது வேகப்​பந்து வீச்​சாள​ராக பிரின்ஸ் யாதவ் அல்​லது குர்​னூர் பிரார் களமிறங்​கக்​கூடும். இந்​தத் தொடரில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. ஆப்கானிஸ்​தான் அணி ஹஸ்​மதுல்லா ஷாஹிதி தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

டெஸ்ட் போட்​டி​யில் விளை​யா​டாத ரஷித் கான், முகமது நபி ஆகியோர் களமிறங்​கு​வது அந்த அணிக்கு கூடு​தல் பலம் சேர்க்கக்​கூடும். டெஸ்ட் போட்​டி​யில் 6 விக்​கெட்​கள் வீழ்த்​திய வேகப்பந்து வீச்​சாள​ரான முகமது சலீம்​ மீது எதிர்​பார்​ப்​பு உள்​ளது.

SCROLL FOR NEXT