அன் சே யங்
புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோன் கீன் யூ, இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி எதிர்த்து விளையாடினார். இதில் ஜோனாதன் கிறிஸ்டி 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் அன் சே யங், முன்னாள் சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானுடன் மோதினார். இதில் அன் சே யங் 21-11, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் அன் சே யங், சீனாவின் வாங் ஸி யி-யுடன் மோதுகிறார். வாங் ஸி யி அரை இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த சென் யு ஃபெயி-யை 21-15, 23-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.