புதுடெல்லி: இந்திய டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ஆதிக்கத்துக்கு, உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து இடைவிடாது உருவாகி வரும் திறமையான வீரர்களே காரணம் என்று சூர்யகுமார் யாதவ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திறமையைப் பற்றிப் பேசினால், நம் நாட்டில் ஐபிஎல், பிரான்சைஸ் கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை வீரர்கள் வருகிறார்கள் என்பதை பார்க்க முடியும். எனவே, டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை எத்தனை அணிகளை வேண்டுமானாலும் நம்மால் உருவாக்க முடியும்.
திறமை என்பது எல்லையற்றது. இரண்டு அல்லது மூன்று அணிகளை நம்மால் உருவாக்க முடியும். இதன் வாயிலாக இந்திய அணியின் அடித்தளம் அவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை அறியலாம். நம்மிடம் அவ்வளவு பலம் இருக்கிறது, நான் புள்ளிவிவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஆனால் எந்தப் போட்டியிலும் தோற்பதை விரும்பமாட்டேன்.
ஓய்வறையில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் ஒரே திசையை நோக்கிச் செயல்பட்டால் மட்டுமே, இவ்வளவு பெரிய வெற்றி சதவீதத்தை எட்ட முடியும். பேட்டிங் என்பது 70-75 சதவீதம் எதிர்வினை சார்ந்தது. மீதமுள்ள 25 சதவீதம் என்பது உள்ளுணர்வு. அதாவது அந்த நொடியில் என்ன செய்ய முடிவு செய்கிறீர்கள் என்பதுதான். மைதானத்துக்குள் நுழைந்தவுடன், கிட்டத்தட்ட ஒரு ‘ஆட்டோபைலட்’ முறையில் இருப்போம். சூழ்நிலைக்கு ஏற்பபேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும்.
துணிச்சலாக இருப்பதற்கும், கவனக்குறைவாக இருப்பதற்கும் இடையே மிக மெல்லிய கோடுதான் உள்ளது. நான் எப்போதும் துணிச்சலான பக்கத்திலேயே இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால், ஆட்டத்தின் சூழ்நிலை ஒரு ஆபத்தான ஷாட்டை விளையாட வேண்டும் என கோரினால், அதை விளையாடிதான் ஆகவேண்டும். அதிக வெகுமதிகளுக்கு அதிக ரிஸ்க் தேவைப்படுகின்றன.
ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை நான் உணர்வது என்னவென்றால், இது ஒரே போட்டியில் மூன்று வெவ்வேறு நிலைகளில் பேட்டிங் செய்ய வேண்டிய ஒரு ஆட்டமுறையாகும். சில நேரங்களில், சீக்கிரமாகவே களமிறங்க நேரிட்டு, விக்கெட்டுகள் வேகமாக விழுந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டை போல நிதானமாக விளையாட வேண்டும்.
அதன்பிறகு, ஒருநாள் போட்டிக்குரிய சரியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாட வேண்டும். இன்னிங்ஸின் கடைசியில் டி20 ஆட்டத்தை போன்று அதிரடியாக விளையாட வேண்டும். எனவே, இந்த ஒரு வடிவம் மட்டும் எனக்குப் புரிய இல்லை. இதில் சிறப்பாக விளையாட நான் எனது முழு முயற்சியையும் எடுத்தேன். உண்மையி லேயே இது சவாலான வடிவம்.
நம் வாழ்க்கையில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அதுதான் நமக்குக் கிடைக்கும். நான் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில்தான் எனது பயணத்தைத் தொடங்கினேன். சுமார் 10-12 ஆண்டுகள் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடினேன். மும்பையில் வளர்ந்தால் நீங்கள் சிவப்புப் பந்து ஆட்டத்தில்தான் தொடங்குவீர்கள்.
எல்லாமே அதைச் சுற்றியே இருக்கும். ஆனால் படிப்படியாக, வெள்ளைப்பந்து கிரிக்கெட்விளையாடத் தொடங்கியபோது, எனது ஆர்வம் அதன் பக்கம் திரும்பியது. அதற்கு பிறகுதான் டி 20 வடிவத்துக்கு வந்தேன். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட நான் நிறைய முயற்சி செய்தேன். ஆனால் அது கைகூடவில்லை. டி20 ஆட்டமுறை எனக்கு செட் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.