கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கம், 3 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, சாக்சி சவுத்ரி, பிரீத்தி பவார், பிரியா கங்காஸ் ஆகியோர் தங்கம் வென்றனர். இந்திய வீரர் ஜதுமணி சிங் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையும் நடப்பு உலக சாம்பியனுமான ஜாஸ்மின் லம்போரியாவும், வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷும் மோதினர். இதில் ஜாஸ்மின் 5-0 என்ற கணக்கில் மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மகளிர் 54 கிலோ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்கடோவைத் தோற்கடித்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நேற்று இரவு நடைபெற்ற மகளிர் 51 கிலோ பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை சாக்சி சவுத்ரியும், இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டும் மோதினர். இதில் சாக்சி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
மகளிர் 60 கிலோ பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா கங்காஸ் 4-1 என்ற கணக்கில் கனடா வீராங்கனை மேரி பதவுல் அல் அகமதியாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் 80 கிலோ பிரிவுக்கான போட்டியில் அங்குஷ் பங்கல் தங்கம் வென்றார். ஆடவர் 60 கிலோ பிரிவில் சச்சின் சிவாச் தங்கம் வென்றார். மகளிர் 70 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றார்.
நேற்று நடைபெற்ற ஆடவர் 55 கிலோ பிரிவு குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஜதுமணி சிங் 0-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜை டிக்சானிடம் தோல்வி கண்டார். 2-வது இடம் பிடித்த ஜதுமணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா வெள்ளி வென்றார். ஆடவர் 90+ கிலோ எடைப்பிரிவில் நரேந்தர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
குண்டு எறிதலில் தங்கம்
பாரா தடகளப் போட்டியின் ஆடவர் எஃப்-57 பிரிவில் இந்திய வீரர் சோமன் ராணா 13.40 மீ்ட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் ஷுபம் ஜுயால் 13.28 மீட்டர் தூரத்துக்கு குண்டை வீசியெறிந்து வெள்ளி வென்றார். கேமரூன் வீரர் செட்ரிக் வெண்கலத்தைத் தட்டிச் சென்றார்.
டெகத்லானில் வெண்கலம்
டெகத்லான் போட்டியில் (10 விளையாட்டுகள் இடம்பெறும் கூட்டுப் போட்டி) ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை தேஜஸ்வின் சங்கர் படைத்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர், மொத்தம் 7,976 புள்ளிகளை பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார். அவருக்கு முழங்கால் தசைநார் அழற்சி பாதிப்பு இருந்தபோதிலும் இந்த போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கிரெனடா வீரர் லிண்டன் விக்டர் 8,096 புள்ளிகளுடன் தங்கமும், கனடாவின் டேமியன் வார்னர் 8,036 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர்
பிரவீன் சித்ரவேலுக்கு வெள்ளி
ஆடவர் டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளியும், மற்றொரு இந்திய வீரர் செல்வப்பிரபு திருமாறன் வெண்கலமும் வென்றனர். இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி 2-ம் இடம் பிடித்தார். செல்வப்பிரபு 16.52 மீட்டர் தாண்டி வெண்கலத்தைக் கைப்பற்றினார். இதே பிரிவில் ஜமைக்கா வீரர் ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.