லிங்கன்: இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லிங்கன் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 102, சாய் சுதர்சன் 88, துருவ் ஜுரெல் 71, திலக் வர்மா 81, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 14 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டமும் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக நடைபெற வில்லை. இதனால் இந்த போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்களும் டிரா ஆனதால் இரு அணிகளுமே கவுரவிக்கப்பட்டன.
நியூலிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் 2 நாட்கள் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது இந்திய வீரர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.